ஓய்வின் பின்னர் அரகலய சர்ச்சை தொடர்பில் மனம் திறந்த சவேந்திர சில்வா
2022ஆம் ஆண்டு நடைபெற்ற அரகலய போராட்டம் எனது உண்மையான நண்பர்கள் மற்றும் உண்மையான எதிரிகள் யார் என்பதை வெளிப்படுத்தியது என ஓய்வு பெற்ற இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்(BMICH) இடம்பெற்ற சவேந்திர சில்வாவின் பதவி விலகும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“2022ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தினால் ஏற்பட்ட குழப்ப நிலை, எனது இராணுவ வாழ்க்கையில் ஒரு சிக்கலான கட்டமாகும். இது எனது உண்மையான நண்பர்கள் மற்றும் உண்மையான எதிரிகள் யார் என்பதை காட்டிக்கொடுத்தது.
குறைந்தபட்ச அதிகாரம்
இராணுவம் என்பது ஒரு உத்தியோகபூர்வ ஆயுதப் படையாகும். இது வெளியில் அல்லது உள்நாட்டில் அரசுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் மக்களைப் பாதுகாக்க தயாராக உள்ளது.
அரகலய போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த இராணுவத்தினர் குறைந்தபட்ச அதிகாரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டேன்.
எந்த ஒரு சாதாரண அப்பாவி குடிமகனும் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இறப்பதை நான் விரும்பவில்லை. நிராயுதபாணியான மக்களுக்கு எதிராக அதிகாரத்தைப் பயன்படுத்தும் ஒருவனாக இருக்க நான் விரும்பவில்லை.
இதேவேளை, அதிகார வெறி பிடித்த ஆட்சியாளர்கள் கூறுவது போல், அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்ற தீய நோக்கம் என்னிடம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |