அரபு நாடொன்றில் முதன்முறையான திறக்கப்படும் மதுபானசாலை
மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவில் அதன் தலைநகர் ரியாத்தில் முதல் மதுபானக் கடையைத் திறக்கத் அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சவுதி அரேபியாவைச் சுற்றுலா மற்றும் வணிக தளமாக மாற்றும் நோக்கத்துக்கான நடவடிக்கையாக, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையிலான அரசு இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இந்த மதுபான நிலையத்தில், முஸ்லிம் அல்லாத வெளிநாட்டுத் தூதர்களுக்கு மது விற்பனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த புதிய திட்டத்தின் மூலம், வெளிநாட்டு தூதர்கள் மதுவைப் பெறவேண்டுமென்றால், இதற்கென உருவாக்கப்பட்டிருக்கும் வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து, அனுமதிக் குறியீட்டைப் பெற்று, தொலைபேசி செயலி மூலம் பதிவுசெய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
விஷன் 2030
சவுதி அரேபியாவை, அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் எண்ணெய் வளத்தைக் கடந்து, பொருளாதாரத்தை மேம்படுத்த `விஷன் 2030' எனப்படும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
அதன் ஒருபகுதியாக சவுதி அரேபியாவைச் சுற்றுலா மற்றும் வணிகத்தளமாக மாற்றும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மதச்சார்பற்ற சுற்றுலா, இசை நிகழ்ச்சிகள் மற்றும் திரையரங்குகளுக்கு அனுமதி, பெண்களை வாகனம் ஓட்ட அனுமதித்தல், தளவாட மையங்களை உருவாக்குதல் மற்றும் தற்போது மது விற்பனை உள்ளிட்டவை `விஷன் 2030' என்ற திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சுற்றுலா வாசிகளை ஈர்க்கும் விதமாக உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தயையும் சவுதி அரேபியா அமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |