கீழ் மல்வத்து ஓயா பெயரில் செட்டிகுளத்தில் குடியேற்ற திட்டமா..! சத்தியலிங்கம் எம்.பி ஆவேசம்
கீழ் மல்வத்து ஓயா பெயரில் செட்டிகுளத்தில் குடியேற்ற திட்டமா என நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கேள்வி எழுப்பிய நிலையில், பயிர்செய்கைக்காக அநுராதபுர மாவட்ட மக்களுக்கு காணிகள் வழங்கப்படும் என திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், பிரதியமைச்சருமாகிய உபாலி தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்திருந்தனர்.
இதன்போது செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கப்பாச்சி கிராமத்தை அண்மித்த பகுதியில் வனவள திணைக்களத்தால் சுமார் 1650 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தாம் அறிந்துள்ளதாகவும் அதன் உண்மைத்தன்மை தொடர்பாக சபைக்கு அறிவிக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் சபையில் தெரிவித்திருந்தார்.
“கீழ் அருவியாறு (கீழ் மல்வத்து ஓயா) நீர்பாசன திட்டம்”எனும் பெயரில் 2019ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட நீர்பாசன திட்டமானது மீண்டும் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதனூடாக கட்டப்படும் நீர்த்தேக்கத்திலிருந்து மன்னார் மாவட்டத்தின் கட்டுக்கரைக்குளம் மற்றும் அகத்திமுறிப்பு குளங்களுக்கு நீர்வினியோகத்தை பரிபாலனம் செய்வது, நீர்மின்சாரத்தை பெறுவது, மதவாச்சி, செட்டிகுளம் பிரதேசங்களுக்கான குடிநீர் வழங்கல், மேட்டு நீர்பாசன வசதியை ஏற்படுத்தல் என்பன திட்ட நோக்கமாக சொல்லப்படுகிறது.
திட்டங்களுக்காக விடுவிக்கப்படும் காணி
இந்த திட்டத்தினூடாக கட்டப்படும் அணையின் கீழ் வவுனியா மற்றும் அநுராதபுர மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசம் நீரேந்து பகுதிக்குள் உள்வாங்கப்படுகிறது. குறிப்பாக வவுனியா வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 450 ஏக்கர் வயல் மற்றும் மேட்டுக்காணிகள் நீரேந்து பிரதேசத்திற்குள் செல்கின்றது.
இவ்வாறான சூழலில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கப்பாச்சி கிராமத்தை அண்மித்த பிரதேசத்தில் சுமார் 1650 ஏக்கர் வனப்பகுதியை மேற்படி திட்ட தேவைகளுக்காக விடுவிப்பதாக அறியக்கூடியதாக உள்ளது. எனவே நீரேந்து பிரதேசத்திற்குள் செல்கின்ற சுமார் 450 ஏக்கர் காணிகளுக்குப் பதிலாக சுமார் 1650 ஏக்கர் காணியை வனவள திணைக்களத்தினைக்களம் விடுவிப்பது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் குறித்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினார்.
உரிய பதில் கிடைக்காததால், அநுராதபுரம் மாவட்டத்தில் மேற்படி திட்டத்தினால் காணிகளை இழக்கும் மக்களை செட்டிகுளத்தில் குடியேற்றம் செய்யவா இந்த மேலதிகமான காணிகள் விடுவிக்கப்பட்டன என நேரடியாக கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த மல்வத்து ஓயா திட்டத்துக்குப் பொறுப்பான அதிகாரி, செட்டிகுளத்தில் தாம் குடியேற்றம் எதனையும் செய்யவில்லை எனவும், அனுராதபுரம் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் மூலம் வயல் காணிகளை இழக்கும் மக்களுக்கு செட்டிகுளத்தில் வயல் காணிகளை வழங்கவே திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காகவே இந்த காணிகள் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதனால் ஆவேசமடைந்த சத்தியலிங்கம் எம்பி, இன்னொரு மாவட்டத்தில் உள்ள ஒருவருக்கு, இந்த மாவட்டத்துடன் சம்மந்தப்படாத ஒருவருக்கு எதற்காக இந்த மாவட்டத்தில் காணிகளை வழங்குகின்றீர்கள். நீங்கள் மீண்டும் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்காதீர்கள் என கடிந்தார். இதன்போது குறுக்கிட்ட பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, இலங்கை என்பது ஒரு நாடு, இங்கு யாருக்கும் எங்கும் காணி வழங்கலாம், அதற்குரிய அதிகாரம் அரசாங்கத்திற்கு உள்ளது என தெரிவித்தார்.
இதனால் மீண்டும் விசனம் தெரிவித்த சத்தியலிங்கம் எம்.பி, இந்த மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்றும் வயற்காணிகள் இல்லாது உள்ளனர். அவர்களுக்கு குறைந்தது ஒரு ஏக்கர் வயற்காணியாவது வழங்க வேண்டும் என கடந்த பல வருடங்களாக கோரி வருகின்றோம். நான் மாகாணசபையில் இருக்கும் போது 5 வருடங்களாக இதைக்கோரி வந்தேன்.
கோரிக்கை முன்வைப்பு
தற்போது மீண்டும் கடந்த இரண்டு வருடங்களாக நான் இந்த கோரிக்கையினை முன்வைத்து வருகின்றேன். நாடாளுமன்றத்திலும் இவ்விடயத்தை முன்வைத்தேன், சம்மந்தப்பட்ட அமைச்சின் ஆலோசனைக்கூட்டத்தில் இக்கோரிக்கையை முன்வைத்தேன், அமைச்சரிடமும் பேசியிருக்கின்றேன். ஆனால் இதுவரை ஒரு ஏக்கர் காணி கூட எமது மாவட்ட மக்களுக்கு வழங்கப்படவில்லை.
அதுமட்டுமல்ல யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீளக்குடியேறும் மக்களின் வயல்காணிகளை வனவளத்திணைக்களமும் ஏனைய திணைக்க்களங்களும் கையகப்படுத்தி வைத்துள்ளீர்கள், அக்காணிகளை விடுவிக்குமாறு பல தடவைகள் கோரியிருக்கிறோம், ஆனால் நீங்கள் அவற்றை விடுவிக்காமல் மேலும் மேலும் எமது மக்களின் விளைநிலங்களை கையகப்படுத்துகிறீர்கள்.
இவ்வாறு மிகமோசமாக நடந்துகொள்ளும் நீங்கள் எவ்வாறு வெளிமாவட்ட மக்களுக்கு வவுனியா மாவட்டத்தில் காணிகளை வழங்குவீர்கள்? நான் இனவாதம் பேசவில்லை. எனது மாவட்ட மக்களுக்காக அவர்களின் பிரதிநிதி எனும் வகையில் இதனை கேட்கும் பொறுப்பும் உரிமையும் எனக்குள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் செட்டிகுளத்தில் சின்னசிப்பிக்குளம், ஆனைவிழுந்தான் உள்ளிட்ட 5 குளங்கள் நீரேந்து பகுதிகளுக்குள் செல்லும் எனக்காரணம் காட்டி கடந்த 7 வருடங்களாக விவசாயிகள் பயிரிடுவதை தடுத்து வருகிறீர்கள். அந்த விவசாயிகள் தமது வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது?
குறித்த விவசாயிகளுக்கு பயிர்செய்கை தடுக்கப்பட்டுள்ளதால் ஏற்படும் பொருளாதார சரிவை ஈடுசெய்ய ஒவ்வொரு போகத்திற்கும் நட்டஈடாக ஏக்கருக்கு ரூபா 35,000/- வழங்கப்படுமென அறிவிக்கப்பட்ட போதும் இதுவரை ஒரு சதமேனும் வழங்கப்படவில்லை. அதேநேரம் வயல்செய்கை மேற்கொள்ளவும் அனுமதிக்கப்படவில்லை.
அதுமட்டுமல்ல இந்த திட்டம் சம்மந்தமாக இதுவரையில் வெளிப்படையாக எந்த கூட்டங்களிலும் பேசப்படவில்லை. மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களிலும் தெளிவுபடுத்தப்படவோ, அனுமதி பெறப்படவோ இல்லை. ஏன் இவ்வாறு இரகசியாக இந்த வேலைகளை செய்கின்றீகள்?
அநுராதபுர மாவட்ட மக்களை குடியேற்றும் நோக்கமே இந்த திட்டம் என்பது இதன்மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது என தெரிவித்தார்.
இதனையடுத்து நீண்ட வாதபிரதிவாதங்களின் பின்னர் அடுத்த மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இந்த விடயம் முன்வைக்கப்பட்டு தெளிவுபடுத்தப்படுமென திட்ட அதிகாரியினால் தெரிவிக்கப்பட்டது.