நீதித்துறை இயங்குவதில் எவ்வித அர்த்தமும் இல்லை - சரத்தின் கருத்துக்கு சட்டத்தரணிகள் போர்கொடி
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவமானமாக கருத்துரைத்தமைக்கு சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் நீதித்துறை இயங்குவதில் எவ்விதமான அர்த்தமும் இல்லை என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரி.பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.
சரத் வீரசேகரவின் கருத்தினை கண்டித்து முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக சட்டத்தரணிகள் மேற்கொண்ட கண்டன போராட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தெடர்பில் அவர் மேலும் தெரிவி்க்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் உரையானது முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி, நீதிமன்ற நடவடிக்கைகள், வழங்கப்பட்ட கட்டளைகள் தொடர்பாகவும் அவமதிக்கும் முறையிலே பேசியிருக்கிறார்.
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
நீதித்துறை சுதந்திரமாக செயற்பட வேண்டிய ஒன்று. குருந்தூர் மலை பிரச்சினை என்பது 2018 ஆம் ஆண்டு ஒரு வழக்காக தாக்கல் செய்யப்பட்டு காலத்திற்கு காலம் தேவையான கட்டளைகள் வழங்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கின்றது.
ஆனால் அந்த நேரத்தில் கற்களும், மலைகளும் தான் இருந்தன. அப்போது தொல்பொருள் செய்வதாக கூறி தொல்பொருள் குழுவினர் வந்திருந்தார்கள். படிப்படியாக கட்டளைகள் வழங்கப்பட்டிருந்தாலும் அங்கே ஒரு விகாரையை நிறுவி நாளாந்த பூஜைகளை செய்யுமளவிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
சட்டத்தை, நீதிமன்ற கட்டளைகளை மதிக்காமலும் செயற்பட்டிருப்பதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி அதனை துஷ்பிரயோகம் செய்து நீதிபதியை, நீதித்துறை சுதந்திரத்தை பாதிக்கின்ற வகையிலே செயற்பட்டிருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவிற்கு எதிராக உரிய நடவடிக்கையை சட்டத்துறையினரும் உரிய அதிகாரிகளும் மேற்கொள்ள வேண்டும்.
நாடாளுமன்றத்திலே சிறப்புரிமை உண்மையான விடயம் அதனை துஷ்பிரயோகபடுத்த கூடாது. அங்கே சபாநாயகர் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்ற இவ்வாறான அவதூறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற போது எதுவுமே பேசாது வாய்மூடி மௌனியாக இருந்திருக்கிறார்.
தடுக்க வேண்டிய இடத்திலே தடுக்காமல் இருப்பதும் பேச வேண்டிய இடத்திலே பேசாமல் இருப்பதும் பிழையான நடவடிக்கையாகும். நீதித்துறை சுதந்திரமாக செயற்பட யாரும் தலையீடு செய்யக்கூடாது.
நீதிதுறை சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்
சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகத்தையும் கடைப்பிடிக்க வேண்டிய நாடாளுமன்றத்திலே , சட்டத்தை உருவாக்குகின்ற நாடாளுமன்றத்திலே நீதிமன்ற சுதந்திரத்தை பாதிக்கின்ற வகையிலும் தனிப்பட்ட நீதிபதிகளின் சுயாதீன தன்மையை கேள்விக்குறியாக்குகின்ற வகையிலும் செயற்படுவது உண்மையிலே தவிர்க்கப்பட வேண்டும்.
இது நீதித்துறைக்கு ஏற்பட்டிருக்கின்ற பாரிய அவமானமாக கருதுகின்றேன். குறித்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறுமாக இருந்தால் அதற்கெதிராக தொடர்ந்து தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொண்டு அதற்கான தீர்வுகாண வேண்டிய தேவைப்பாடுகள் ஏற்படும்.
சட்டத்துறையை தாக்குகின்ற போதும் நீதிபதிகளுக்கு அவமானத்தை ஏற்படுத்துகின்ற போதும் நாங்கள் குரல் கொடுப்போம். நடவடிக்கை எடுப்போம் அது சம்பந்தமாக உறுதியாக இருக்கின்றோம் என்பதனை கூறிக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



