தமிழர்களால் மகிந்தவும் கோட்டாபயவும் விரட்டியடிக்கப்படுவீர்கள்! சரத் பொன்சேகா பகிரங்க தகவல்
தமிழ் மக்களின் மனதை பிரதமர் மகிந்த ராஜபக்சவாலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவாலும் ஒருபோதும் வெல்லவே முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எனவே, தமிழ் மக்களின் வாழ்விடங்களுக்கு அவர்கள் இருவரும் சென்றால் அங்குள்ள மக்களால் விரட்டியடிக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றிருந்த பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சில இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே சரத் பொன்சேகா இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போதே மகிந்த ராஜபக்சவை யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் வெறுத்துவிட்டார்கள். அந்தத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல வடக்கில் எனக்கே அதிக வாக்குகள் கிடைத்தன.
அதற்காக வடக்கு மக்களுக்கு நான் என்றும் நன்றியுடையவனாக இருப்பேன். யாழ்ப்பாணம் மாவட்ட மக்களின் மனதை வெல்ல வேண்டும் என்பதற்காகவே அங்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச விஜயம் செய்தார்.
எனினும், பிரதமரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்குள்ள மக்கள் வீதிகளில் போராடி அவரை விரட்டியடித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட மக்களின் மனதையோ அல்லது வடக்கு, கிழக்கு மக்களின் மனதையோ அல்லது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதையோ பிரதமர் மகிந்த ராஜபக்சவாலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவாலும் ஒருபோதும் வெல்லவே முடியாது.
எனவே, தமிழ்
மக்களின் வாழ்விடங்களுக்கு மகிந்தவோ அல்லது கோட்டாபயவோ சென்றால் அவர்கள்
அங்குள்ள மக்களால் விரட்டியடிக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.