இது பொய்யால் உருவான அரசு என்பதை உணர்ந்துள்ள மக்கள்: ஐக்கிய மக்கள் சக்தி சாடல்
தமது கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெறமாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தானே தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இது பொய் கூறும் அரசு அல்ல, பொய்யால் உருவான அரசு என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
பிராந்திய ஸ்திரத்திரத்தன்மை
அவர் மேலும் கூறுகையில், தற்போது பிராந்திய ஸ்திரத்திரத்தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான நிலவரங்கள் அயல்நாடுகளில் நிலவுகின்றன.
எனவே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தற்போதைய நிலைமையைப் பொறுமையாகவும் அமைதியாகவும் கையாள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் யுத்த நிலைமையே காணப்படுகின்றது. ஒருபுறம் இஸ்ரேல் - பலஸ்தீன் மோதல் இடம்பெற்று வரும் நிலையில், மறுபுறம் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் பொருளாதாரப் போர் ஆரம்பித்திருக்கின்றது.
எனவே, ஆசிய பிராந்தியத்தை அமைதியாகப் பேண வேண்டியது சகல ஆசிய நாடுகளினதும் பொறுப்பாகும். அந்த வகையில் இவ்விரு நாடுகளும் அமைதியாகச் செயற்படுவதே முக்கியத்துவம் வாய்ந்தது.
தீவிர பிரசாரம்
அரசும் சர்வதேச நிலைமைகள் குறித்த புரிதலுடன் செயற்பட வேண்டும். தற்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பிரசாரங்கள் இடம்பெற்று வருகின்றன. தமது கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெறமாட்டார்கள் என்பதைப் புரிந்துகொ ண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தானே தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளார்.
இது பொய் கூறும் அரசு அல்ல, பொய்யால் உருவான அரசு என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். தலதா வழிபாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்ட போதிலும், அரசால் அதற்கான முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. சனநெரிசலைக் கட்டுப்படுத்த முடியாது போயுள்ளது.
இதன் காரணமாகவே ஜனாதிபதி மீண்டும் அங்கு சென்றிருக்கின்றார். அரசின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. கடந்த ஆட்சியாளர்கள் தலதா வழிபாட்டுக்குச் செல்லும்போது ஊடகங்களையும் அழைத்துச் செல்வதாக அன்று ஜே.வி.பி. விமர்சித்தது. ஆனால், இன்று அவர்களும் அதையே செய்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |