மன்னார் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பு வெளிமாவட்டத்திற்கு விற்பனை! - மன்னார் அரசாங்க அதிபர் நேரடி விஜயம்
மன்னார் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பை மன்னார் மாவட்ட மக்களுக்கும், மீனவர்களுக்கும் பாவனைக்காக வழங்கத் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேல் கொண்டு வந்துள்ளார்.
மக்களும், மீனவர்களும் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைவாக மன்னாரில் அமைந்துள்ள தேசிய உப்பு உற்பத்தி நிலையத்திற்கு இன்றைய தினம் நேரடியாகச் சென்ற அரசாங்க அதிபர் குறித்த கோரிக்கையை முன்வைத்தார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னார் மாவட்டத்தில் அதிகமானவர்கள் மீனவர்களாகக் காணப்படுவதோடு, மீன்களைப் பதனிட்டு கருவாடாக்கி சந்தைப்படுத்தி வருகின்றனர்.
மன்னாரில் அமைந்துள்ள தேசிய உப்பு உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உப்பை மன்னார் மாவட்டத்திலுள்ள மீனவர்கள் கொள்வனவு செய்து கருவாட்டிற்குப் பயன்படுத்தி வந்தனர்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள கருவாட்டிற்கு வெளி மாவட்டங்களிலும், வெளிநாடுகளிலும் மதிப்பு உள்ளது. அதற்குக் காரணம் மன்னாரில் உள்ள தரமான உப்பு காரணமாக உள்ளது.
எனினும் தற்போது மன்னாரில் அமைந்துள்ள தேசிய உப்பு உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பு மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு விற்பனை செய்யப்படாமல் வேறு மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆனால் புத்தளம் மற்றும் ஆனையிறவு போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகின்ற தரம் குறைந்த உப்பினை மன்னார் மாவட்ட மக்களுக்கும், மீனவர்களுக்கும் விற்பனை செய்கின்றனர்.
குறிப்பாக புத்தளத்தில் இருந்து மிகவும் தரம் குறைந்த உப்பை மன்னாரிற்குக் கொண்டு வந்து மக்களுக்குப் பாவனைக்காக வினியோகிக்கின்றனர். இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். குறித்த விடயம் தொடர்பாக மக்களும், மீனவர்களும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேல் இன்று புதன்கிழமை(10) மாலை மன்னாரில் அமைந்துள்ள தேசிய உப்பு உற்பத்தி நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பை மன்னார் மாவட்ட மக்களுக்கும், மீனவர்களுக்கும் பாவனைக்காக வழங்கத் துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தார்.
மேலும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் ஊடாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்குக் குறித்த விடயம் தொடர்பாக அரசாங்க அதிபர் கொண்டு வந்தார்.
இந்த நிலையில் மிக விரைவில் மன்னாரில் உற்பத்தி செய்யப்படும் உப்பு மன்னார் மாவட்ட மக்களின் பாவனைக்காக விநியோகிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, மன்னார் மாவட்ட மீனவர்களுக்குத் தேவையான அளவு உப்பை வழங்கவும் அரசாங்க அதிபரின் முயற்சியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





