சம்பள அதிகரிப்பை கோரி நிறுவனத்தின் அதிகாரிகளை சிறைப்பிடித்த ஊழியர்கள்
புத்தளம்-பாலாவி உப்பு நிறுவனத்தின் ஊழியர்கள் சம்பள அதிகரிப்பை கோரி, சிறைப்பிடித்து வைத்திருந்த நிறுவனத்தின் கணக்காளர் உட்பட நிர்வாகத்தை சேர்ந்த நான்கு பேரை இன்று அதிகாலை மீட்டதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாலாவி உப்பு நிறுவனத்தின் ஊழியர்கள் 10 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை கோரி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை புத்தளம் தொழிலாளர் அலுவலகத்தில் கடந்த 23 ஆம் திகதி நடைபெற்றது.
இதனடிப்படையில் ஒரு பகுதி ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் 220 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அத்துடன் வாய்க்கால் துறையில் 200 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். நிலவும் சம்பள பிரச்சினைக்கு 27 ஆம் திகதி தீர்வு வழங்க நிறுவனம் இணங்கியுள்ளது.
அதிகாரியின் அறிவிப்பால் குழப்படைந்த ஊழியர்கள்
எனினும் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இதனை நிறுவனத்தின் கணக்காளர், ஊழியர்களுக்கு அறிவித்ததை அடுத்து பிரச்சினை உக்கிரமடைந்துள்ளது.
இந்த அறிவிப்பால், குழப்பத்திற்கு உள்ளான ஊழியர்கள், உப்பு நிறுவனத்தின் பிரதான வாயில் கதவை மூடி, கணக்காளர் உட்பட நிர்வாகிகள் 4 பேரை வெளியில் செல்லவிடாது நிறுவனத்திற்குள் சிறை வைத்துள்ளனர்.
அத்துடன் ஊழியர்கள் அணிகளாக பிரதான வாயில் கதவுக்கு அருகில் காவல் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிறுவனத்திற்குள் நுழைந்து அதிகாரிகளை மீட்ட பொலிஸார்
இது குறித்து உப்பு நிறுவனத்தின் நிர்வாகம், புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
இதனடிப்படையில் இன்று அதிகாலை விசேட பொலிஸ் குழுவினர், உப்பு நிறுவனத்தின் பின்புறம் வழியாக உள்ளே சென்று, அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த கணக்காளர் உட்பட நான்கு பேரை மீட்டு, பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் இருந்து அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் கூறியுள்ளனர்.