சாக் சுரின் யானையை அழைத்துச் செல்லும் முடிவில் தாய்லாந்து உறுதி
நோயால் பாதிக்கப்பட்ட யானையை தாய்லாந்திற்கு அழைத்துச் செல்வதை இலங்கை விரும்பவில்லை. எனினும் யானையை மீண்டும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல தாய்லாந்து வலியுறுத்தி வருவதாக வனஜீவராசிகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இன்று(20.06.2023) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தாய்லாந்து ஆண் யானையான சாக் சுரின், சிகிச்சைக்காக அடுத்த மாதம் இலங்கையில் இருந்து அழைத்துச் செல்லப்படவுள்ளது.
தாய்லாந்திடம் மன்னிப்பு கோரிய பிரதமர்
யானையை தாய்லாந்திற்கு கொண்டு செல்வதற்கான தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு இலங்கைக்கான தாய்லாந்து தூதுவரிடம், தாம் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தேன்.
எனினும் யானையை அழைத்துச் செல்லும் முடிவில் தாய்லாந்து உறுதியாக உள்ளது. இந்த யானை இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமானது அல்ல. அது தாய்லாந்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.”என தெரிவித்தார்.
இதேவேளை அண்மையில் தனது விஜயத்தின் போது யானை விவகாரம் தொடர்பில் தாய்லாந்திடம் மன்னிப்பு கோரியதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை
2001 ஆம் ஆண்டு இலங்கைக்கு நல்லிணக்க அடிப்படையில், தாய்லாந்தால் பரிசளிக்கப்பட்ட முத்து ராஜா என அழைக்கப்படும் சக் சுரின், பல ஆண்டுகளாக தவறாக நடத்தப்பட்டதாக விலங்கு உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான அமைப்புக்கள் குற்றம் சுமத்தியிருந்தன.
யானைக்கு அதிக வேலை இருந்தபோதும், அது உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை.
அத்துடன் யானைக்கு பாரிய காயங்களும் ஏற்பட்டுள்ளன, இதனால் எட்டு ஆண்டுகளாக அதன் இடது முன்காலை வளைக்க முடியவில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே தாய்லாந்து அரசு யானையை மீளப்பெற கோருகிறமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |