சஜித்தின் கோரிக்கையை புறக்கணித்த தினேஸ்! நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் தமது கருத்துக்களை வெளியிட சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் என்ற எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் கோரிக்கையை அரசாங்க கட்சி ஏற்றுக்கொள்ளாத நிலையில் நாடாளுமன்ற அமர்வு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாட்டில் நிலவுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது கருத்துக்களை வெளியிட்டனர்.
இந்தநிலையில் பிற்பகல் 2.30க்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு விடுத்திருந்தார்.
இதனை கருத்திற்கொண்டு பிற்பகல் 2.10 அளவில் நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைப்பதாக அவையின் தலைவர் தினேஸ் குணவர்த்தன யோசனையை முன்மொழிந்தார்.
இதனை சபையில் அறிவிப்பதற்காக நாடாளுமன்றத்துக்கு தலைமை தாங்கிய உறுப்பினர் தயாரானபோது, கோரிக்கையை முன்வைத்த எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு தாம் சமுகமளிக்கவுள்ளபோதும், இன்று மாலை 4.30 வரையில் நாடாளுமன்றத்தில் ஏனைய உறுப்பினர்கள் தமது கருத்துக்களை தெரிவிக்க அனுமதிவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
எனினும் இதனை ஏற்றுக்கொள்ளாத அவைத்தலைவர் தினேஸ் குணவர்த்தன, நாளைய தினம் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதாக குறிப்பிட்டார்.
இதற்கு மத்தியிலும் தமது கோரிக்கையை சஜித் பிரேமதாச தொடர்ந்தும் வலியுறுத்திய நிலையில், சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினர், சபை நாளை வரை ஒத்திவைப்பதாக அறிவித்து ஆசனத்தில் இருந்து எழுந்தார்.