அரசாங்கத்திற்கு எதிராக வெளிநாட்டு தூதுவர்களிடம் முறைப்பாடு செய்யும் சஜித் தரப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஜனநாயக நெறிமுறைகளை மீறுவதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தி உள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி வெளிநாட்டு தூதுவர்களுக்கு அறிவித்துள்ளது.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இலங்கையின் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்கு உதவுமாறு வெளிநாட்டு தூதுவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவதாகவும், உயர் நீதிமன்றத்தின் தீர்மானங்கள் உதாசீனம் செய்யப்படுவதாகவும், அரசாங்கத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள் நாடாளுமன்ற வரப்பிரசாத குழுக்களுக்கு அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்படுவதாகவும், சுயாதீன ஆணை குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் ஜனநாயகத்தை போற்றும் நாடுகளின் தூதுவர்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது குறித்த விடயங்கள் பற்றி அவர் பிரஸ்தாபித்துள்ளார்.
தூதுவர்களுடன் சந்திப்பு
இந்தியா, ஜெர்மன், பிரான்ஸ், நேபாளம், அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளின் தூதுவர்களை எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு கொழும்பின் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அண்மையில் நடைபெற்றதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியல்ல தெற்குகு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் கயந்த கருணா திலக்க, ஹர்ஷ டி சில்வா, இரான் விக்ரமரத்ன, நிரோஷன் பெரேரா, மயந்த திசாநாயக்க, மனோ கணேசன், சந்திம வீரக்கொடி , டலஸ் அழப்பெரும, ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்டோரும் பங்கேற்று இருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
