சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு பேருந்தினை வழங்கிய சஜித்
யாழ்ப்பாணம் (Jaffna) சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் (Sajith Premadasa) பேருந்து ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து பல்வேறு பகுதிகளிலும் நிகழ்வுகளில் பங்குபற்றி வருகின்றார்.
அந்தவகையில், இன்றையதினம் (12.06.2024) சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு சுமார் 5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பேருந்து ஒன்றினை வழங்கி வைத்துள்ளார்.
பேருந்தை செலுத்திய சஜித்
மாணவர்களின் நலன் கருதி பேருந்து ஒன்றினை வழங்குமாறு பாடசாலை சமூகத்தினர் எதிர்க்கட்சித் தலைவரிடம் நேரடியாக கோரிக்கை ஒன்றினை முன்வைத்ததனையடுத்தே இந்த பேருந்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
வழக்கம்பரை அம்மன் ஆலயத்தில் பேருந்துக்கான பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதன் பின்னர், மாணவர்களை ஏற்றி, எதிர்க்கட்சித் தலைவர் பாடசாலை வரை பேருந்தை செலுத்திச் சென்றார்.
இந்நிகழ்வில், ஐக்கிய மக்கள் சக்தியின் வடக்கு மாகாண இணைப்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ், கட்சியின் உறுப்பினர்கள், கல்லூரியின் அதிபர் சுலபாமதி, பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |