பெயர் மாறினாலும் கொள்கை மாறவில்லை: ஜே.வி.பியை சாடும் சஜித் கட்சி
பெயர் மாறினாலும் ஜே.வி.பியினரின் கொள்கை இன்னும் மாறவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்துள்ளார்.
தமக்குப் பயங்கரவாத வரலாறு இருப்பதாலேயே ஜே.வி.பி. கட்சியானது அப்பெயரில் வராமல் புதியதொரு பெயரில் வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது, இந்த நாட்டில் பொருளாதாரத்துக்குப் பேரழிவை ஏற்படுத்தியவர்கள்தான் ஜே.வி.பியினர்.
பொருளாதாரத்துக்குப் பேரழிவு
எத்தனை தொழிற்சாலைகளை எரித்திருப்பார்கள்? எத்தனை ட்ரான்ஸ்போமர்களை கொளுத்தி இருப்பார்கள்? எத்தனை பேருந்துகளை எரித்திருப்பார்கள்? இந்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களைத் திறக்க அவர்கள் அனுமதிக்கவில்லை.
வெளிநாட்டு வருமானத்தை அவர்கள் தடுத்தனர். இவ்வாறு பொருளாதாரத்துக்குப் பேரழிவை ஏற்படுத்தியவர்கள்தான் ஜே.வி.பியினர்.
இன்று தமது பெயரை மாற்றிக்கொண்டு தேசிய மக்கள் சக்தியினர் என வெளியில் முகம் காட்டுகின்றனர்.
பெயரை மாற்றியதன் நோக்கம் என்ன? ஊர்ப் பகுதிகளில் உள்ள ரௌடிகள் சிறைக்குச் சென்று மீண்டும் வரும்போது தமது பெயர்களை மாற்றிக்கொண்டே வருவார்கள்.
ஜே.வி.பியினர் விமர்சனம்
அதுபோலவே ஜே.வி.பி. இன்று என்.பி.பி.யாக வந்துள்ளது. தமது பயங்கரமான – பயங்கரவாத வரலாற்றால் தான் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
ஆனால், ஜே.வி.பியினரின் கொள்கை மாறவில்லை. அடுத்த தேர்தலில் எமது கூட்டணியே வெற்றி பெறும்.
அதனால் தான் எம் மீது ஜே.வி.பியினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் என ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |