மக்களை ஒடுக்கும் எல் போர்ட் அரசாங்கம் - சஜித் கடும் விமர்சனம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார இணக்கப்பாடுகளையும் தாண்டி, தீவிர வலதுசாரி நவதாராளவாத வேலைத்திட்டத்தை நோக்கிச் செல்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
குருநாகல், பன்னலயில் நேற்று (13.07.2026) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அதிக வரி விதிப்பு
அவர் மேலும் உரையாற்றுகையில், சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டதை விடவும் அதிக வரிகளை இந்த அரசு விதித்து வருகின்றது. முதன்மைக் கணக்கு 2.3% ஆக இருக்க வேண்டிய நிலையில், அதை 5.4% ஆக உயர்த்தி, ஐ.எம்.எவ்வின் செல்லப் பிள்ளையாக மாற அரசாங்கம் முயற்சிக்கின்றது.
மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றிக் கவலையின்றி, அரச வருமானத்தை 15.4% ஆக உயர்த்த வரி மற்றும் செலவினக் குறைப்புகளை இந்த அரசு மேற்கொள்கின்றது. அரசு, எதிர்க்கட்சியின் வாயை மூடுவதுடன், சுயாதீன நீதித்துறைக்கு முறையற்ற செல்வாக்கைச் செலுத்துகின்றது.
நீதித்துறையைத் தனது கைப்பாவையாக மாற்ற முயற்சிக்கின்றது. நீதியரசர்களின் நியமனங்கள் மற்றும் ஓய்வுபெறும் வயது தொடர்பான விவகாரங்களில் அரசு மேற்கொள்ளும் அழுத்தங்கள் ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட சவாலாகும்.
விவசாயிகளை வஞ்சிக்கும் அரசாங்கம்
நெற்செய்கை விவசாயிக்கு ஒரு கிலோவுக்கு 17 ரூபா நட்டத்தை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் காலத்தில் 150 ரூபா உத்தரவாத விலை வழங்குவதாகக் கூறிவிட்டு, இன்று 120 ரூபாவையே வழங்குகின்றது. உற்பத்திச் செலவு 137 ரூபாவாக இருக்கும் நிலையில், விவசாயிகளை அரசாங்கம் வஞ்சிக்கின்றது. கல்வி முறையை மாற்றப்போவதாகக் கூறி, வரலாற்றுப் பாடத்தின் முக்கியத்துவத்தை இல்லாமல் ஆக்கியுள்ளனர்.
மேலும், முறையான முதலீடுகள் இன்றி தொழிற்சாலைகள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றன. அனைத்தையும் குழப்பிக் கொண்டுள்ள இதுவொரு 'எல் போர்ட் அரசு' ஆகும். எந்தவொரு விடயத்தைப் பற்றியும் அரசுக்குச் சரியான புரிதல் இல்லை. பொய் மற்றும் ஏமாற்றுகள் மூலம் ஆட்சியைத் தக்கவைக்க இந்த அரசு முயற்சிக்கின்றது என்றார்.




