முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்திப் பாருங்கள் - அநுர அரசுக்கு சஜித் சவால்
சுதந்திர ஊடக செயற்பாடுகளை அரச அடக்குமுறைக்கு உட்படுத்தும் சட்டமூலத்தையே இந்த அரசு கொண்டு வந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
அரசு செல்லும் பாதை சரியானதா, பிழையானதா என்பதைப் பரிசீலித்துப் பார்ப்பதற்கு, முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்திப் பார்க்குமாறும் அவர் சவால் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (11.06.2026) உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடக நடவடிக்கை
அவர் மேலும் உரையாற்றுகையில், இலங்கை உயர் தொழில்களின் பட்டயம் பெற்ற ஊடக நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை அரசு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது. ஊடகத்துறையைத் தொழில்முறைப்படுத்துகின்றோம் என்ற போர்வையில், சுதந்திர ஊடக நடவடிக்கைகளை அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவே இதன் மூலம் முயற்சிக்கப்படுகின்றது.
ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அமைச்சருக்கு ஒரு இடைக்கால நிர்வாகச் சபையை நியமித்துக் கொள்ளவும், அதில் பதவி வழி அடிப்படையில் அமைச்சின் செயலாளரை உறுப்பினராக்கவும் இந்தச் சட்டமூலத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. யார் ஊடகவியலாளராகச் செயற் பட முடியும் என்பதைத் தீர்மானிக்கும் விடயத்தில் அரசு ஒரு வாயிற்காவலனாக மாறியுள்ளது. இது பாரதூரமானதொரு பிரச்சினையாகும்.
தொழில்முறைத் தவறுகளைக் காரணம் காட்டி, ஊடகவியலாளர்களின் அங்கத்துவம் இடைநிறுத்தப்படலாம். இது ஊடக அடக்குமுறையின் ஒரு வடிவமாகும். ஜனநாயகத்தை மீறும் வகையில் அமைந்துள்ள இந்தச் சட்டத்தின் மூலம் முக்கிய விதிமுறைகள் மற்றும் அங்கத்தவர் தகுதிகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் அமைச்சருக்கும் பேரவைக்குமே வழங்கப்பட்டுள்ளது.
அடக்குமுறை
சுய ஒழுங்குமுறைக்கு பதிலாக, சுதந்திர ஊடகத்துறையில் அரச ஒழுங்குமுறையைக் கொண்டுவரும் ஒரு அடக்குமுறை நடவடிக்கையையே அரசு முன்னெடுத்து வருகின்றது. திறமையான, நகரும் நூலகங்கள் என அரசு தன்னைத்தானே வர்ணித்துக் கொண்டாலும், ஜூன் 13ஆம் திகதி நடைபெறவுள்ள ஆசிய ரக்பி போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள நமது நாட்டு வீரர்களுக்கு இன்னும் வீசாக்களைப் பெற்றுக் கொடுக்க முடியாத நிலையில் இந்த அரசு உள்ளது.

நமது நாட்டு விளையாட்டு அணிக்கு, ஒரு வெளிநாட்டுத் தொடருக்கான வீசாவைக் கூட பெற்றுக்கொடுக்க முடியாத இந்த அரசு வறுமையை எங்ஙனம் ஒழிக்கப் போகின்றது? பிரஜா சக்தி வேலைத்திட்டத்தால் நாட்டின் வறுமை எவ்வாறு ஒழியும் என்ற கேள்வி எழுகின்றது. வறுமையை ஒழிக்கும் திட்டத்தில் சேமிப்பு, முதலீடு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி என்பன உள்ளடங்கியிருக்க வேண்டும்.
ஆனால், பிரஜா சக்தி திட்டத்தில் இவை எவையும் இல்லை. நாட்டின் பேரண்ட பொருளாதார மாறிகள் எதிர்மறையான திசையில் செல்லும்போது, நுண் பொருளாதார மாறிகளும் பரிதாபகரமான நிலையிலேயே காணப்படுகின்றன. இன்று நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர், மீனவர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலைமைகளைப் பார்க்கும்போது நாட்டை ஆளுவது ஒரு வினைத்திறனற்ற அரசு என்பது தெளிவாகிறது. எனவே, அரசு செல்லும் வழி சரியானதா அல்லது பிழையானதா என்பதைப் பரிசீலித்துப் பார்க்க, ஒரு லிட்மஸ் பரிசோதனையாக உடனடியாக மாகாண சபை தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.