சுவிட்சர்லாந்து தூதுவரை சந்தித்த சைவநெறிக்கூடத்தின் பிரதிநிதிகள்
சுவிட்சர்லாந்தின் இலங்கைக்கான தூதுவர் சீரி வல்ற், குடிவரவு சிறப்பு அதிகாரி தோறிஸ் மனோர், மனிதப் பாதுகாப்பு அதிகாரி யஸ்ரீன் பொய்லாற் ஆகியோரை, சைவநெறிக்கூடத்தின் இணைப்பாளர் சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார், சைவநெறிக்கூடத்தின் இளையோர் மன்றத்தின் மதியுரைஞரும் சட்டவல்லுநரும் ஆன லாவண்யா இலக்ஸ்மணன், மற்றும் இலங்கையில் அமையவுள்ள பல்சமய இல்லத்தின் சார்பாளர்கள் ஆகியோர் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்தச் சந்திப்பில் பௌத்த தேரர் புத்தியாகம சந்திரரத்தின, அருட்தந்தை வர்ணகுலசூரிய எமனுவேல் பியூஸ் கென்னடி, திருநிறை மொமத் சலி அப்துல் முஜீப் மற்றும் சிவத்திரு வெங்கட்ராமன் சுந்தரராமன் குருக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, சைவநெறிக்கூடம் இலங்கையில் முன்னெடுத்து வரும் பணிகளும், இலங்கைக்கான பல்சமய இல்லத்தின் செயற்பாடுகளும் விளக்கப்பட்டுள்ளன.
பல்சமய இல்லம் – முன்னேற்றம்
2016ஆம் ஆண்டு முதல், புத்தளத்தில் செயற்படும் பல்சமய இல்லத்தின் மாதிரி கொண்டு ஒருமித்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 11.03.2025 அன்று, புத்தள மாவட்ட அரச அதிபர் ஹேரத், இந்தத் திட்டத்திற்காக 2 ஏக்கர் நிலம் ஒதுக்கினார்.
இந்த இடத்தில் ஒல்லாந்தர் காலத்து நினைவகம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிவருசி. சசிக்குமார் கருத்து
"இந்த பல்சமய இல்லம் தமிழர்களுக்குத் தீர்வாக அமையும் என நாங்கள் நம்பவில்லை. ஆனால், 4 சமயத்தவர்களும், மூவினத்தவர்களும் ஒருவரை ஒருவர் மதித்து, புரிந்துகொள்ளக்கூடிய மேடையாக இது அமையும் என நம்புகிறோம்" என சிவருசி. சசிக்குமார் கருத்து வெளியிட்டார்.
சைவத் தமிழர் கோவில்களின் நிலை
இன்றுவரை பலநூறு சைவத் தமிழர் வழிபாட்டு தலங்கள் பல்வேறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. நாளாந்த வழிபாடு நடைபெறாமல் கோவில்கள் மூடப்பட்டுள்ளன. இவற்றை மீண்டும் வழிபாட்டிற்குத் தக்கவாறு கையளிக்க சுவிட்சர்லாந்து தலையிட வேண்டும் என தூதுவரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
தூதுவரின் பாராட்டும் உறுதிமொழியும்
நான்கு சமயத்தவர்களின் ஒற்றுமையை மேம்படுத்த பல்சமய இல்லம் ஒரு முக்கியமான முயற்சி என தூதுவர் திருமதி. சீரி வல்ற் பாராட்டினார். இந்தத் திட்டத்திற்கான காற்கோள்விழா 2026ல் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
சைவத் தமிழர் கோவில்களுக்கான விசா
சுவிட்சர்லாந்து தூதுவரிடம், சைவத் தமிழர் கோவில்களுக்கு வழங்கப்படும் உள்நுழைவு ஒப்புதல் (விசா) மேலும் இலகுவாக வழங்கப்பட வேண்டுமென்று திருக்கோவில் ஒன்றியம் சார்பாக சிவருசி. சசிக்குமார் நேரில் கோரிக்கை விடுத்துள்ளார்.
லாவண்யா இலக்ஸ்மணன் உறுதி
"இரண்டாம், மூன்றாம் தலைமுறையினரின் திறன்களை மேம்படுத்தி, இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்தில் பெரிய சமூகநலத் திட்டங்களில் ஈடுபடுத்துவதற்கு சைவநெறிக்கூடம் தொடர்ந்து பங்காற்றும்." என லாவண்யா இலக்ஸ்மணன் உறுதியளித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து தூதுவர், கடந்த 14.12.24 அன்று சுவிஸில் சைவநெறிக்கூடம் வழங்கிய வரவேற்பிற்கும், மதிப்பளிப்பிற்கும் நன்றியினைத் தெரிவித்தார். நிகழ்வு புதிய நம்பிக்கையுடன் இனிதே நிறைவடைந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |