சைவசமயத் தலைமைக்கு அகத்தியர் அடிகளார்: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்
வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சைவ அமைப்புகளின் தலைமைப் பிரதானிகளின் முக்கிய கூட்டம் இன்று (06) வவுனியா அகிலாண்டேசுவரர் திருக்கோவிலில் நடைபெற்றது.
இதன்போது, தென்கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளாரை இலங்கை சைவ சமயிகளின் தலைவராக ஏகமனதாக முன்மொழிந்து ஏற்றுக்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
அகத்தியர் அடிகளார்
அத்துடன், இந்த தீர்மானத்தை சைவ சமய மக்கள், இந்து கலாசாரத் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் மற்றும் அரச உயர் மட்டத்தினருக்கு தெரியப்படுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தென்கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளாரின் அருளாட்சியில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அகிலாண்டேசுவரர் ஆலயத்தின் தலைமை அறங்காவலர் சிவத்திரு நவரட்ணராசா, திருக்கோணேசுவர ஆலயத்தின் தலைமை அறங்காவலர் சட்டத்தரணி துசியந்தன், நயினை நாகபூசணி ஆலயத்தின் தலைமை அறங்காவலர் சிவத்திரு சரவணபவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும், சைவ சமயப் பேரவை தலைவர் அகோரசிவம் உமையரசு சிவாச்சாரியார், கிழக்கு இந்து ஒன்றியத் தலைவர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவத்திரு யோகேசுவரன், இலண்டன் கனகதுர்க்கை ஆலய அறங்காவலர் மருத்துவர் பரமநாதன், அகில இலங்கை சைவ மகா சபையின் பொதுச்செயலாளர் மருத்துவர் பரா. நந்தகுமார், அகில இலங்கை சிவமங்கையர் தலைவி சிவசகோதரி சோதிநாயகி அம்மையார் உள்ளிட்ட பலரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கிளிநொச்சி திருநெறிக்கழக தலைவர் சிவத்திரு சிவஞானசுந்தரம், வவுனியா மாவட்ட சுத்தானந்த இந்து இளைஞர் கழக தலைவர் சிவத்திரு அமலன், சிவ சகோதரர்கள், சிவதொண்டர்கள் மற்றும் சிவமங்கையர் மாவட்ட இணைப்பாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.
முக்கிய தீர்மானம்
இதேவேளை, யாழ்ப்பாணத்தைத் தலைமையகமாகக் கொண்ட சிவகுரு ஆதீனம், சைவ பரிபாலன சபை, சைவப்புலவர் சங்கம், மலையகத்தைத் தலைமையகமாகக் கொண்ட சிவசகோதரர் அமைப்பு, கொழும்பைத் தலைமையகமாகக் கொண்ட இலங்கை சைவநெறிக் கழகம் உள்ளிட்ட நாடளாவிய சைவ அமைப்புகளும், பிராந்திய மற்றும் நாடளாவிய சைவ சமய குருமார் ஒன்றியங்களும் ஏற்கனவே தவத்திரு அகத்தியர் அடிகளாரை இலங்கை சைவ சமயிகளின் தலைமையாக ஏற்றுக்கொள்வதற்கான தமது ஆதரவை வெளியிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அதேபோன்று, கடந்த மாத இறுதியில் கொழும்பைத் தலைமையகமாகக் கொண்ட அகில இலங்கை இந்து மாமன்றமும் தவத்திரு அகத்தியர் அடிகளாரை தலைவராக ஏற்றுக்கொள்வதற்கான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தது.
இதனிடையே, வெற்றிடமாக உள்ள நல்லை குருமகா சந்நிதானத்தின் அருளாட்சியை ஏற்று வீற்றிருக்குமாறு பல சைவ சமய அமைப்புகளும் நல்லை ஆதீன நம்பிக்கைப் பொறுப்புச்சபையும் தவத்திரு அகத்தியர் அடிகளாரிடம் விண்ணப்பித்திருந்தன.
அந்த விண்ணப்பத்தை தவத்திரு அகத்தியர் அடிகளார் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதனை நல்லை ஆதீன நம்பிக்கைப் பொறுப்புச்சபை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என சைவ அமைப்புகளின் இணையம் வலியுறுத்தியுள்ளது.
சைவ சமய மக்கள்
மேலும், திருக்கோவில்களில் ஆபாசமான ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் பக்தர்களுக்கும் அயல் பிரதேச மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அதிக ஒலி, ஒளி நிகழ்வுகள் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், அனைத்து ஆலயங்களும் சைவ சமய மக்களுக்கு அறப்பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இதற்கு நயினை நாகபூசணி, வவுனியா சிவன், இலண்டன் கனகதுர்க்கை மற்றும் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயங்கள் முன்னுதாரணங்களாகக் குறிப்பிடப்பட்டன.

மேலும், 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட எதிர்கால அரசியலமைப்பு சீர்திருத்தங்களில் சைவ சமய மக்களின் அபிலாஷைகளை சட்டரீதியாக அரசாங்கத்திடம் முன்வைப்பதற்காக ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழுவொன்றை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
திருக்கோணேசுவர ஆலயத்தின் தலைவர் சட்டத்தரணி துசியந்தன் இந்தக் குழுவின் இணைப்பாளராக செயற்படவுள்ளார்.
மூத்த சட்டத்தரணிகளான இரட்ணவேல், ஜெயரூபன், தயாபரன் மற்றும் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சைவ சமய விவகாரங்களுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் யோகேசுவரன் உள்ளிட்டோர் குழுவில் அங்கம் வகிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் சிவ சகோதரர்களை ஆதீனத்தின் அருளாணையுடன் நியமிக்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இறுதியாக, வவுனியா சிவன் கோவிலில் இடம்பெற்ற மகேசுவர பூஜையைத் தொடர்ந்து, பயனுறுதியான கலந்துரையாடல்களுடன் கூட்டம் ஏகமனதான தீர்மானங்களையும் கொள்கைப் பிரகடனத்தையும் நிறைவேற்றி பிற்பகல் 2 மணியளவில் நிறைவடைந்தது.




லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட் Cineulagam
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri