நாமலின் பிரத்தியேகச் செயலாளர் வீட்டிற்குள் சுவரேறிக் குதித்துச் சென்ற பொலிஸார்! நள்ளிரவில் நடந்த சோதனை
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிரத்தியேகச் செயலாளரான சஞ்சய என்பவரது கைது குறித்து, பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் விளக்கமளித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சஞ்சய சமரசிங்கவின் வீட்டில் பொலிஸார் உள்நுழைந்த போது தான் அவருடன் தொலைபேசி வாயிலாக பேசியதாகவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் பெட்டிக்குள் பணம்
கைது செய்யப்பட்ட சஞ்சய சமரசிங்கவின் தகவலின் அடிப்படையில், “இரவு 10 மணியளவில் சிவில் உடையில் இருந்த சிலர் மற்றும் பொலிஸ் சீருடையில் இருந்த வேறு சிலரும் சஞ்சயவின் வீட்டின் கதவைத் திறக்குமாறு கோரியுள்ளனர்.
அந்தக் குழுவினரைக் கண்டு அச்சமடைந்த சஞ்சய, அந்த அதிகாரிகளிடம் காலையில் வருமாறு கோரியுள்ளார். எனினும், சஞ்சயவின் கோரிக்கையை ஏற்காத அவர்கள், வீட்டின் சுவரேறிக் குதித்து விட்டிற்குள் நுழைய முற்பட்டுள்ளனர்.
இதனையடுத்து வீட்டிற்குள் சென்ற அதிகாரிகள், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு ஒன்றை காண்பித்ததாகவும்” சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சஞ்சய சமரசிங்கவின் வீட்டில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிகாரிகள், அங்கிருந்து எதனையும் கண்டெடுக்கவில்லை எனவும், அங்கு இருந்த பழைய பாதுகாப்புப் பெட்டி ஒன்றைத் திறக்க முயற்சித்த போது, அதன் இரகசியக் குறியீடு தெரியாததால் அதனை திறக்க முடியவில்லை எனவும் சாகர காரியவசம் சுட்டிக்காட்டினார்.
எனினும், குறித்த பாதுகாப்புப் பெட்டியில் பணம் இருந்ததாகவும், ஆனால், அந்தப் பெட்டிக்குள் இருந்த பணத் தொகைத் தொடர்பில் தனக்கு ஏதும் துல்லியமான விபரங்கள் தெரியாது என்றும் சாகர காரியவசம் இதன்போது சுட்டிக்காட்டினார்.