பிரசன்ன ரணதுங்கவின் குற்றச்சாட்டு அவர்களின் இயலாமையை வெளிப்படுத்துகிறதா: சபா குகதாஸ் கேள்வி
நேற்றையதினம் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கா வெளியிட்ட அறிக்கையில் தமிழர் தரப்புகளிடம் ஒற்றுமையின்மை காரணமாகத் தான் ஜனாதிபதிக்கு ஒரு தீர்வினை எட்ட முடியாமல் இருக்கிறது என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ரெலோ இயக்கத்தின் இளைஞர் அணி தலைவருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (09.08.2023) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்
இது குறித்து அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தமிழர் தரப்பின் ஒற்றுமையின்மை
தமிழர் தரப்பு ஒற்றுமையாக வந்திருந்தால் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த முடியும். அதை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழர் தரப்பின் ஒற்றுமையின்மை தான் காரணம் என ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டானது உண்மையிலேயே ஒரு வேடிக்கையான விடயமாக இருக்கின்றது.
13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்துவதற்கு தமிழர் தரப்பு அவசியம் இல்லை. காரணம், இப்போது இந்த நாட்டில் மீ உயர் சட்டமாக இருக்கின்ற அரசியல் அமைப்பில் கொண்டுவரப்பட்ட திருத்தமே 13 ஆவது திருத்தம். கிட்டத்தட்ட 1988 ஆம் ஆண்டு இது நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு முழுமையாக இந்த அரசியல் அமைப்பில் கொண்டு வரப்பட்டது.
ஆகவே இதை நடைமுறைப்படுத்த வேண்டிய தார்மீக பொறுப்பு அரசாங்கத்துக்கு தான் இருக்கிறதே தவிர தமிழ் கட்சிகளுக்கு இல்லை.
ஆகவே அரசாங்கம் தங்களுடன் இருக்கின்ற கட்சிகளை ஒன்றிணைத்து, அவர்களை ஒற்றுமைப்படுத்தி இதை நடைமுறைப்படுத்துவதற்கு பதிலாக தமிழர் தரப்பு மீது பிரசன்ன ரணதுங்க குற்றம் சாட்டுவது அவர்களுடைய இயலாமையை வெளிப்படுத்துகிறதா? அல்லது மீண்டும் மீண்டும் தமிழர் தரப்பு பலவீனப்பட்டிருப்பதாக காட்டி இந்தப் பிரச்சினையை தொடர்ந்து கொண்டு செல்வதற்கு முயற்சிக்கின்றார்களா என்ற சந்தேகம் தான் தற்போது உருவாகியுள்ளது.
உண்மையாக இந்த 13 ஆவது திருத்தம் எனவே அரசியலமைப்புக்குள் இருக்கின்ற ஒரு விவகாரம், இதனை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து பேச வேண்டிய அவசியம் இல்லை, இதை உடனடியாக அரசாங்கம் நடைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதன் மூலம் இந்த நாடு ஒரு
சுமுகமான முறையில் கொண்டு செல்வதற்கு ஆளும் கட்சியாளர்கள் தான் முன்வர
வேண்டுமே தவிர, தமிழர் தரப்பு மீது குற்றம் சாட்டுவதை நாங்கள் ஒரு வேடிக்கையான
விடயமாக தான் பார்க்க வேண்டும்.
சிங்கள பெரும்பான்மை கட்சிகள்
உண்மையாக 13 ஆவது திருத்தத்தை இந்த அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தி இந்த நாட்டை ஒரு சுமூகமான நிலைக்கு கொண்டு செல்ல தயார் என்று சொன்னால், தமிழர் தரப்பு, இனப்பிரச்சினை ரீதியாக எல்லோரும் ஒன்றுபட்டு பேசுவதற்கு வருவதற்கு தயாராக இருக்கின்றார்கள்.
ஏனென்றால் தமிழர் தரப்பின் இனப்பிரச்சனைக்கு தீர்வாக, எங்களுடைய மக்கள் ஆணையாக அனைத்து கட்சிகளும் சமஸ்டியை தான் முன் வைத்திருக்கின்றார்கள். ஆகவே 13 ஆவது நடைமுறைப்படுத்த தயார் இல்லாத அரசாங்கத்திடம் சமஸ்டியை நாங்கள் கேட்பது என்பது ஒரு சிரிப்பாகத்தான் இருக்கும்.
உண்மையிலேயே இந்த அரசாங்கம் மனப்பூர்வமாக இதய சுத்தியுடன் 13 ஆவது திருத்தத்தை எந்தவிதமான தடைகளுமின்றி கால இழுத்தடிப்பும் இன்றி உடனடியாக நிறைவேற்றுவார்களாக இருந்தால், இந்த அரசாங்கத்துடன் நாங்கள் இனப்பிரச்சினை ரீதியான ஒரு தீர்வுக்கு பேச நாங்கள் தயார் என தமிழ் கட்சிகள் ஏற்கனவே கூறி இருக்கின்றார்கள்.
தமிழ் காட்சிகள் அந்தப் பேச்சுவார்த்தை மேசைக்கு வரத் தயாராக தான் இருக்கின்றார்கள். ஆகவே பிரசன்ன ரணதுங்கவின் குற்றச்சாட்டானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. சிங்கள பெரும்பான்மை கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து 13 நடைமுறைப்படுத்த முதலில் முன் வாருங்கள்.
அவ்வாறு முன் வருகின்ற போது தமிழர் தரப்பு இனப் பிரச்சினை ரீதியான தீர்வுக்கு ஒன்றுபட்டு உங்களுடைய பேச்சு வார்த்தை மேசைக்கு வர தயாராகத்தான் இருக்கின்றார்கள் என தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




