மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி நஷீத் உடன் ருவன் விஜேவர்த்தன சந்திப்பு
மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான முஹம்மத் நஷீத் உடன் முன்னாள் அமைச்சர் ருவன் விஜேவர்த்தன சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
கொழும்பு-03ல் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கும் வகையில், ராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் முஹம்மத் நஷீத்துக்கு ருவன் விஜேவர்த்தன தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அத்துடன் ராஜதந்திர முயற்சிகள் மூலம் இலங்கையின் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான வழிகள் குறித்தும் இருவரும் நீண்ட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முஹம்மத் நஷீத், இலங்கையின் நீண்ட கால நண்பர் என்றும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம் இலங்கையின் நெருக்கடியைத் தணிப்பதற்கான ராஜதந்திர முயற்சிகளுக்கு அவர் ஒத்தாசை புரிந்து வருவதாகவும் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.