ஆயுத பற்றாக்குறையால் தடுமாறும் உக்ரைன்! மேற்கத்திய நாடுகளின் அடுத்தகட்ட நகர்வு
கனரக உபகரணங்கள் மற்றும் போர் விமானங்கள் உட்பட ஆயுதங்கள் பற்றாக்குறை காரணமாக ரஷ்யாவுக்கு எதிராக எதிர் தாக்குதலை தொடங்க முடியவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஓர் ஆண்டுக்கும் மேலாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. அதே வேளையில் நட்பு நாடுகளிடம் இருந்து கிடைக்கும் ஆயுதங்களை கொண்டு உக்ரைன் இராணுவம் ஓர் ஆண்டாக ரஷ்ய படைகளை எதிர்த்து துணிவுடன் சண்டையிட்டு வருகிறது.
தீவிரமடையும் போர்
இந்நிலையில், ஜனவரி மாதமளவில் உக்ரைனின் முக்கிய புலனாய்வு இயக்குநரகத்தின் தலைவர் கைரிலோ புடானோவ், உக்ரைன் ஒரு பெரிய எதிர்த்தாக்குதலைத் திட்டமிடுவதாகக் கூறினார், மார்ச் மாதத்தில் "வெப்பமான" சண்டை எதிர்பார்க்கப்படுகிறது எனவும் எச்சரித்தார்.
ரஷ்ய படைகள் தற்போது கிழக்கு உக்ரைனில் உள்ள பக்முட் நகரை கைப்பற்ற தீவிரம்காட்டி வரும் நிலையில் அங்கு இருநாட்டு இராணுவத்துக்கும் கடுமையான சண்டை நடந்து வருகிறது.
இதனிடையே ரஷ்யாவுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் எதிர் தாக்குதலை நடத்த உக்ரைன் தயாராகி வருவதாகவும், அதற்கு பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
ஆயுதங்கள் பற்றாக்குறை
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இதுகுறித்து அவர் கூறுகையில், "எங்களால் இன்னும் தாக்குதலை தொடங்க முடியவில்லை. பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகள் இல்லாமல் எங்கள் துணிச்சலான வீரர்களை முன் வரிசைக்கு அனுப்ப முடியாது" என கூறினார்.
மேலும் நட்பு நாடுகளிடம் இருந்து ஆயுதங்களை பெற காத்திருப்பதாகவும், நாட்டின் கிழக்கு பகுதியில் நிலைமை சாதகமாக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பக்முட் போர் கடந்த எட்டு மாதங்களாக நடந்து வருகிறது, இரு தரப்பிலும் பெரும் இழப்புகள் ஏற்பட்டன. இருப்பினும், உக்ரைன் நகரத்தை தொடர்ந்து பிடித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.