உக்ரைனிலிருந்து வெளியேற விரும்பாத 27 இலங்கையர்கள்! வெளிவிவகார அமைச்சர் தகவல்
உக்ரைனில் வசிக்கும் 27 இலங்கையர்கள், வெளியேறாமல் தொடர்ந்தும் உக்ரையினில் தங்கியிருப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (9) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுடன் அங்கீகாரம் பெற்ற துருக்கியின் அங்காராவில் உள்ள இலங்கை தூதரகம் இலங்கையர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.
15 மாணவர்கள் உட்பட உக்ரைனில் 81 இலங்கையர்கள் இருந்தனர். மாணவர்கள் தவிர அங்கு வசித்த 66 இலங்கையர்களில் 39 பேர் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர். போலந்து, ருமேனியா, ஜேர்மன் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர். அதற்கான அனைத்து வசதிகளையும் எமது தூதரகம் செய்து கொடுத்துள்ளது.
தற்போது உக்ரைனில் 27 இலங்கையர்கள்தான் இருக்கின்றனர். அவர்கள் உக்ரைனில் இருந்து வெளியேற முடியாது எனத் தூதரகத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். அவர்களில் சிலர் தொழில் செய்கின்றனர். மேலும், சிலர் குடும்பமாக வாழ்கின்றனர் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
இத தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
1,561 இலங்கையர்கள், முக்கியமாக பல்கலைக்கழக மாணவர்கள் பெலருஸில் வசித்து வருவதாகவும், அவர்கள் ரஷ்யாவின் மொஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகத்தால் கண்காணிக்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் தற்போது நிலவும் மோதல் நிலையை கருத்தில் கொண்டு இலங்கை மாணவர்களுக்கு ஒரு மாத விடுமுறையை பிரகடனப்படுத்த பெலருசிய பல்கலைக்கழகங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ஜீ.எல்.பீரிஸ் மேலும் குறிப்பிட்டார்.