அமைதி தீர்வுக்கான வாய்ப்புகள் இல்லை! சீனாவிற்கு திடீர் விஜயம் செய்த பிரான்ஸ் ஜனாதிபதி
உக்ரைனில் ரஷ்யாவின் போரை நிறுத்த உதவுமாறு பிரான்ஸ் தலைவர் இம்மானுவேல் மக்ரோன் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவுக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்று திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தப் பயணத்தில், சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங்கை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
உலக அமைதி
இது தொடர்பில் மேக்ரான் கூறுகையில்,
அமைதியை கட்டமைப்பதில் சீனா ஒரு பெரும் பங்கு வகிக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதனாலேயே நான் ஆலோசனை நடத்துவதற்காக சீனாவுக்கு வருகை தந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் வர்த்தகம், பருவநிலை மற்றும் உயிர்ச்சூழல் மற்றும் உணவு பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் பற்றி ஆலோசிக்க இருக்கிறேன் என மக்ரோன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மீண்டும் பேச்சுவார்த்தை
"அனைவரையும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வரவும் நான் உங்களை நம்ப முடியும் என்று எனக்குத் தெரியும்," என்று அவர் சீன ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
உலக அமைதியைப் பாதுகாக்கும் திறன் மற்றும் பொறுப்பு சீனாவுக்கும் பிரான்ஸுக்கும் இருப்பதாக மக்ரோன் சீன ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுவரை "அமைதியான தீர்வுக்கான வாய்ப்புகள் இல்லை" என்றும் அதன் தாக்குதல் தொடரும் என்றும் மாஸ்கோ தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டிக்க மறுத்த மேற்கத்திய நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் பல ஆண்டுகளாக மோசமடைந்து வருவதால்,மக்ரோன் சீனாவுக்கு அரசுமுறைப் பயணமாக விஜயம் செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், உக்ரைன் மற்றும் ரஷ்யா போரால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஓரணியாக உள்ளன. ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை சீனா எடுத்து வருகிறது.
இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை வழங்க கூடாது என எச்சரிக்கையும் விடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, ஜெர்மனி அரசும் ரஷ்யாவிடம் இருந்து சீனா விலகி இருக்கும் என நாங்கள் நம்புகிறோம் என கூறியதுடன், இல்லையெனில் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.