ரஷ்யாவின் தாக்குதலால் கதிர்வீச்சு அதிகரிப்பு! - முக்கிய விமான நிலையத்தை மீட்டெடுத்த உக்ரைன்
ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது முழு அளவிலான தாக்குதலை நடத்துவதாகவும், ரஷ்ய இராணுவம் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கிலிருந்து தாக்குதல் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்ய படையினரின் தாக்குதலில் 137 பேர் கொல்லப்பட்டதாகவும் 160 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைனின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தலைநகர் கீவ் மற்றும் பிற இடங்களில் உள்ள மக்கள் தப்பிச் செல்ல முற்படுவதாகவும் இதுவரை சுமார் 100,000 பேர் வெளியேறியுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ருமேனியா, மால்டோவா, போலந்து மற்றும் ஹங்கேரி போன்ற அண்டை நாடுகளுக்கு ஆயிரக்கணக்கானோர் செல்கின்றனர் எனவும் ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.
உக்ரைனில் உள்ள செர்னோபில் நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றின. ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் செர்னோபில் அணுமின் நிலைய பாதுகாப்பு பகுதியில் இருந்து கதிர்வீச்சு அதிகரித்துள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட தாக்குதல்
இந்தத் தாக்குதல் நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட, கொடூரமான ஆக்கிரமிப்பு என்று இங்கிலாந்து இரகசிய புலனாய்வு சேவையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
"அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உளவுத்துறையினர் புடினின் திட்டங்களை வெளிப்படுத்தியதாக” இங்கிலாந்து இரகசிய புலனாய்வு சேவையின் தலைவர் ரிச்சர்ட் மூர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரஷ்ய படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக 1,700 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை கண்டித்து நூற்றுக்கணக்கான மக்கள் சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
மொஸ்கோவில் உள்ள எதிர்கட்சி ஆர்வலரான டாட்டியானா உஸ்மானோவா, “அதிகாலை 5.30 மணிக்கு விழித்தபோது தான் கனவு காண்கிறேன் என்று” தனது பேஸ்புக் பக்கதில் குறிப்பிட்டுள்ளார்.
இது "எங்களுடன் என்றென்றும் இருக்கும் அவமானம்" என்றும், "நான் உக்ரேனியர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். போரை கட்டவிழ்த்துவிட்டவர்களுக்கு நாங்கள் வாக்களிக்கவில்லை, ”என்று அவர் கூறினார்.
முக்கியமான விமானநிலையத்தை மீட்டெடுத்த உக்ரைன்
கிவ்வின் வடமேற்கு புறநகர் பகுதியில் உள்ள விமானநிலையத்தை உக்ரேனிய துருப்புக்கள் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பு நிதியுதவி
உலக சுகாதார அமைப்பு உக்ரைனுக்கு மிகவும் தேவைப்படும் மருத்துவப் பொருட்களை வாங்குவதற்காக அதன் நிதியிலிருந்து 3.5 மில்லியன் டொலரை வழங்கியுள்ளது. உக்ரைன் அரசாங்கம் அவசர மருத்துவப் பொருட்கள் மற்றும் உபகரணங்களுக்காக கோரிக்கை விடுத்ததை அடுத்து இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.