கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்ய - நேட்டோ படைக்குவிப்பு சமரச இலக்கை அடைவதற்கான படைமுஸ்தீபு
படைக்குவிப்பு, படையெடுப்பு, படை முஸ்தீபு, படைப்பயிற்சி, போரொத்திகை இவை அனைத்தும் அரசியல் ராஜதந்திர நடவடிக்கையின் ஒரு பகுதியே.
குறித்த அரசியல் இலக்கை எட்டுவதற்கான நிர்ப்பந்திப்புத் தந்திரோபாயங்களாக . ""கிழக்கு ஐரோப்பாவில் போர் மேகங்கள் சூழ்ந்துவிட்டன.
ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலுக்குத் தயாராகிறது.தாக்குதலை ஆரம்பிக்கப்போகிறது. அமெரிக்கக் கடற்படை கப்பல்கள் மத்திய தரைக்கடலில் குவிந்துள்ளன.
இதுவே கடந்த சில வாரங்களாக உலகளாவிய ஊடகங்களில் பேசுபொருளாக உள்ளன. உண்மையில் உக்ரைனில் என்ன நடக்கப்போகிறது என்பதைப் பற்றி சற்றுத் தர்க்கப்பூர்வமாக பின்னர் பார்ப்போம்.
உக்ரைனில் அது நடக்கப்போகிறது, இது நடக்கப்போகிறது எனப் பலவாறான அக்கப்போர்கள் ஊடகங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இந்த சூழலில் உக்ரைனின் நிலை தான் என்ன? ரஷ்யா எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் எத்தகையது? அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?
மேற்கு ஐரோப்பாவின் நிலைப்பாடு எத்தகையது? படையெடுப்பு நிகழ்ந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன? உலகம் எதிர்நோக்க வேண்டிய பிரச்சினைகள் என்ன?
இது பற்றிய ஒரு தெளிவும் அறிவும் நமக்குத் தேவையாக உள்ளது. பனிப் போரின் முடிவில் சோவியத் யூனியன் உடைந்து ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டிருந்த 14 பிரதேசங்கள் புதிய அரசுகளாகத் தோன்றின. இவற்றிற்கெல்லாம் நடுநாயகமாகத் தலைமை தாங்கிய ரஷ்யா எப்போதும் பாதுகாப்பு மிக்க ஒரு நாடு.
15 கோடி ரஷ்யர்களை ஜெனரல் வின்டர் ( General winter) என்கின்ற இயற்கை பாதுகாப்புக் கவசத்தினால் பாதுகாக்கப்படுகிறது என போரியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுவர்.
அதாவது ரஷ்யாவில் ஏற்படும் கடும் பனிப்பொழிவும் குளிரும் அந்த நாட்டுக்குள் யாரும் படையெடுத்துச் சென்று ரஷ்யர்களை வெற்றி கொள்ள முடியாது.
எனவே ஜெனரல் வின்டர்தான் ரஷ்யாவின் இராணுவ தலைமை என்கிறார்கள். அங்கு நிலவும் கடும் உறைபனியே ரஷ்யாவின் மிகப்பெரிய பாதுகாப்பு கவசமாக விளங்குகிறது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியுடன் ரஷ்யாவின் படைவலு ஐரோப்பாவில் சற்று மூடப்பட்டிருந்தது.
ரஷ்யாவிலிருந்து பிரிந்து சென்ற நாடுகள் ரஷ்யாவின் புவிசார் அரசியலில் முக்கியத்துவம் மிக்கவை. அதிலும் கிரிமியா , உக்ரைன் ரஷ்ய பாதுகாப்பு வளையத்துக்குள் அடங்கும் முக்கிய புள்ளிகளாக உள்ளன.
இந்த ரஷ்ய பாதுகாப்பு வளையத்தினுள் அடங்குகின்ற இப்பகுதிக்குள் வேற்று நாடுகளின் ஆதிக்கம் மற்றும் கூட்டுக்கள் ஏற்படுவதை ரஷ்யா ஒருபோதும் விரும்பாது.
அது ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதுவும் உண்மையே. அந்த அடிப்படையிலேதான் உக்ரைன் பகுதியில் இன்று ஒரு போர் பதற்றம் தோன்றியிருக்கிறது.
ரஷ்யாவிலிருந்து பிரிந்து சென்ற தற்போது மேற்குலக இராணுவ கூட்டணியான நேட்டோ ( NATO) அமைப்பில் உக்ரைன் இணைய எடுத்த முயற்சியின் விளைவே ரஷ்யாவினை இத்தகைய ஒரு படை நடவடிக்கைக்கு தூண்டியது எனலாம்.
ரஷ்யாவிலிருந்து பிரிந்த உக்ரைனின் ஒரு பகுதியாகக் காணப்பட்ட 27000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட கிரிமியாவை அண்மைக் காலத்தில் ரஷ்யா மீண்டும் கைப்பற்றி தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது.
கிரிமியாவின் சுமார் 24, 50, 000 மொத்த சனத் தொகையில் 65 வீதத்தினர் ரஷ்யர்கள். எனவே கிரிமியாவை ரஷ்யாவுடன் நினைப்பதில் எந்த தடையும் அல்லது இடைஞ்சல்களும் ரஷ்யாவுக்கு இருக்கவில்லை.
எனவே அதை இராணுவ ரீதியில் கைப்பற்றியவுடன் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்தி ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொள்வது இலகுவாய் அமைந்தது. ஆனால் அவ்வாறான நிலை நான்கு கோடி மக்களைக் கொண்டதும், 60, 35, 486 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டதுமான எஞ்சிய உக்ரைனில் இல்லை.
அங்கு ரஷ்ய எதிர்ப்பு வாதமும் மேற்கைரோப்பிய மோகமும் தலைதூக்கியுள்ளது. ஆனால் புவிசார் அரசியலில் ரஷ்யாவைப் பொறுத்தவரை அதற்கான மத்திய தரைக்கடல் வழிப்பாதையும், பயணமும் முக்கியமானவை. அதற்கு அடிப்படையான கிரிமியாவை ரஷ்யா ஏற்கனவே பிடித்து தன்னுடன் இணைத்துவிட்டது.
உக்ரைன் நேட்டோவில் இணைந்து கொண்டால் நேட்டோ படைகளினால் ஏவுகணைத் தளங்கள் உக்ரைனில் நிறுவப்படும். இதனால் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். தனது கால்மாட்டில் ஒரு எதிரிப்படை இருப்பை ரஷ்யா ஒருபோதும் விரும்பாது, ஏற்றுக்கொள்ளவும் மாட்டாது.
எனவே இங்கே ரஷ்யாவைப் பொறுத்தவரை அன்னிய சக்திகளின் தலையீடு இல்லாத ஒரு உக்ரைனையே ரஷ்ய விரும்புகிறது. உக்ரைனை தன்னுடன் இணைக்கும் எந்த விருப்பம் ரஷ்யாவிற்கு கிடையாது. ஆனால் அது உக்ரைனை பின்லாந்துவயப்படுத்தலுக்கு (Finlandization) உட்படுத்த விரும்புகிறது.
பின்லாந்துவயப்படுதல் என்பது என்னவெனில் ரஷ்யப் புரட்சியின் பின் ரஷ்யாவின் ஒரு எல்லை நாடான பின்லாந்து ரஷ்யாவுடன் இணைந்து கொள்ளாமலும், அதே நேரத்தில் மேற்குலகுடன் இணைந்து கொள்ளாமலும், ரஷ்யாவுக்குச் சவால் விடக்கூடிய எந்த நாடுகளுடனும் அணிசேராமலும், அதே நேரத்தில் ரஷ்யாவுக்கு எந்த விதத்திலும் பாதகமில்லாத வகையிலான நட்புறவுடனும் இருந்தவாறு மேற்குலகத்திற்கும் ரஷ்யாவுக்கும் இடை நடுவில் சுதந்திரமாகவும், நேர்மையாகவும், நடுநிலைமையாகவும், தனது அரசியல் பொருளியல் கொள்கைகளை வகுத்து ரஷ்யாவின் விருப்புக்குரிய செல்லப்பிள்ளையாக வளர்ந்தது.
அதே நேரத்தில் மேற்குலகத்துடன் நட்புறவையும் பூண்டிருந்தது. ஆனால் அதே ஒருவேளை ரஷ்யாவின் செல்வாக்குக்கு உட்பட்ட நாடாகவும் விளங்கியது.
அதாவது ரஷ்யாவின் பாதுகாப்புக்கு முற்றிலும் இசைவானதும், எந்தவித பாதகம் இல்லாமலும், ரஷ்யாவின் வெளியுறவுக் கொள்கைக்கு எந்த முரணும் இல்லாமலும், ரஷ்யாவின் இறைமையைப் பாதிக்கும் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாத உத்தரவாதத்தைக் கொண்ட நடத்தைகளையும், நடைமுறைகளையும் பின்பற்றுதல் போன்ற கொள்கையைப் பின்பற்றியதனால் ரஷ்யா அதனை தன்னுடைய ஒரு நட்பு நாடாக அரவணைத்துக் கொண்டது.
இதுவே பின்லாந்துவயப்படுதல்(Finlandization) என உலக அரசியலில் அழைக்கப்படுகிறது. இத்தகைய ஒரு பின்லாந்து வயப்படுதலையே இலங்கை மீது இந்தியாவும் அதன் புவிசார் அரசியல் செல்வாக்குக்கு உட்படுத்த விரும்புகிறது. ஆனால் இந்தியாவின் இந்த விருப்பை இலங்கையில் ஒருபோதும் நடைமுறைப்படுத்த முடியாது போய்விட்டது.
இந்தியாவின் இத்தகைய முயற்சியை இலங்கை இராஜதந்திரம் இலாகவமாகக் கையாண்டு தொடர்ந்து இந்தியாவைத் தோற்கடித்து வருகிறது. இந்தியாவால் இலங்கையை ஒருபோதும் பின்லாந்து வயப்படுத்த முடியாது.
அதனை இலங்கை ஒருபோதும் அனுமதிக்காது. இந்தியாவின் பின்லாந்துவயப்படுதலை எதிர்த்துத்தான் இலங்கை தற்போது தனது காலைச் சீனாவில் வைத்துக் கொண்டு அரசியல் சதுரங்கத்தில் இந்தியாவைத் தொடர்ந்து அலைக்கழித்து வருகிறது .
ஆனால் இலங்கை இந்தியாவின் பின்லாந்துவயப்படுத்தலுக்கு ஒரு போதும் உட்படமாட்டாது. ஐரோப்பாவில் இத்தகைய ஒரு பின்லாந்துவயப்படுதல் நிலையைக் கொண்ட உக்ரைனையே ரஷ்யா விரும்புகிறது.
இத்தகைய அரசியல் இலக்கை அடைவதற்கான தந்திரோபாயமாகவே உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படை குவிப்பு, படையெடுப்பு முஸ்தீபு இரண்டையும் மேற்கொண்டுள்ளது.
அந்த அரசியல் இலக்கை ரஷ்யா அடையாவிட்டால் நிச்சயம் உக்ரைன் மீது போர் தொடுக்கப்பட்டு ரஷ்யப் படைகள் உக்ரைனை ஆக்கிரமித்து விடும் என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது.
ரஷ்யாவைப் பொறுத்தவரை ஒரு நீண்ட யுத்தத்துக்கு அது தயாரில்லை. அது குறுகிய காலத்தில் அதிவேகமாக தன்னுடைய படை நடவடிக்கையை முடித்துக்கொள்ள விரும்பும். அதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒன்று நீண்ட போரை ரஷ்யப் பொருளாதாரத்தால் தாங்கிக்கொள்ள முடியாது.
அத்தோடு அதனுடைய மேற்கு ஐரோப்பாவிற்கான பிரதான வர்த்தக நடவடிக்கையான இயற்கை எரிவாயு விநியோகம் தடைப்பட்டுவிடும். அமெரிக்காவினால் விதிக்கப்படக் கூடிய பொருளாதாரத் தடையும் ரஷ்யப் பொருளாதாரத்தினால் நீண்ட காலத்திற்குத் தாங்கிக் கொள்ளமுடியாது.
எனவே அது குறுகிய காலத்தில் தனது இலக்கை அடையவே எப்போதும் முற்படும். அடுத்து இன்று இருக்கின்ற உலகளாவிய இராணுவத்தின் தாங்கி கவச படையில் ரஷ்யாவின் கவசப் படை மிக வலுவானதாக உள்ளது.
எனவே தன்னுடைய கவச படையைப் பயன்படுத்திக் குறுகிய கால அளவுக்குள்ளேயே ரஷ்யா தன் கட்டுப்பாட்டுக்குள் உக்ரைனைக் கொண்டுவர முடியும். ஆனால் இந்த படை நடவடிக்கையால் மேற்கு ஐரோப்பாவில் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் என்ன என்பதையும் பார்க்கவேண்டும்.
ரஷ்யாவின் படை நடவடிக்கையை ஐரோப்பாவும் விரும்பவில்லை. அமெரிக்காவும் விரும்பவில்லை. இதில் முக்கியமானது. ரஷ்யப் படைகள் பிரவேசித்தால் உக்ரைனில் இருந்து தப்பி வெளிவருகின்ற கோடிக்கணக்கான உக்ரைன் மக்களினால் மேற்கு ஐரோப்பா நிரம்பி வழியும்.
ஐரோப்பா இந்த பெரும் அகதித் தொகைச் சுமையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் திணறிப் போகும். அதேவேளை உக்ரெனியர்களினால் மேற்கு ஐரோப்பா விழுங்கப்படும், அல்லது சன ஆக்கிரமிப்புக்கு, அவர்களின் மேலாண்மைக்கு உட்படும் இது மேற்கு ஐரோப்பியர்களின் எதிர்காலத்தையே சிக்கலுக்கு உள்ளாகும்.
ஏனெனில் இப்போது உக்ரைனியர்களின் கனவு மேற்கு ஐரோப்பாவில் குடியேறி வாழ்வதுதான். அவர்களைப் பொறுத்தளவில் மேற்கு ஐரோப்பா சொர்க்க பூமியாகத் தெரிகிறது.
எனவே இந்தப் போர் நடவடிக்கையைப் பயன்படுத்தி அவர்கள் தங்களின் நீண்டநாட் கனவைப் பூர்த்தி செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.
எனவே அதனை மேற்கு ஐரோப்பியர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். அதேவேளை மத்திய தரைக்கடல் அமெரிக்கக் கடற்படை கப்பல்களினால் நிரம்பி வழிகிறது.
இங்கே அமெரிக்கா ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவும், தன்னுடைய சர்வதேச அந்தஸ்தை தொடர்ந்து பேணுவதற்காகவுமே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறது.
அமெரிக்காவும் போரை ஒருபோதும் விரும்பாது. போர் ஏற்பட்டால் நிச்சயம் ரஷ்யாவினால் உக்ரைன் விழுங்கப்பட்டு விடும்.
அதனை அமெரிக்காவும், மேற்கைரோப்பாவும் விரும்பமாட்டார்கள். எனவே இங்கு இரண்டு தரப்புக்களும் போரை விரும்பவில்லை.
ஆகவே உக்ரைன் நெருக்கடி என்பது ரஷ்யா தான் விரும்புகிறபடி அதனுடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாமல், உக்ரைன் நோட்டோ அணியில் இணைய மாட்டாது என்ற உத்தரவாதத்துடன் கூடிய ஒரு பேச்சு வார்த்தை மூலமான ஒப்பந்தத்தை நோக்கிச் செயல்படுகிறது.
இங்கே ரஷ்யா எதிர்பார்க்கின்ற அரசியல் இலக்கை எட்டுவதற்கு அது தனது படை குவிப்பு, படையெடுப்பு முஸ்திப்பு என்ற தந்திரத்தின் மூலம் தனது அரசியல் இலக்கை அடைய அதேவேளை அமெரிக்காவும் ஏனைய நேட்டோ நாடுகளும் உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்கக்கூடாது என்ற உத்தரவாதத்தை எழுத்து ரீதியாகப் பெறும் நோக்கத்தைக் கொண்டு செயல்படுகின்றது.
இவ்வாறு உக்கிரைன் நேட்டோவில் சேர்க்கப்படக் கூடாது என்ற ரஷ்ய நலனும் ரஷ்யாவால் உக்கிரையின் ஆக்கிரமிக்கப்பட்ட கூடாது என்ற அமெரிக்க - நேட்டோ நலனும் சந்திக்கும் ஒரு புள்ளியில் சமரசம் செய்யப்படுவதற்கான ஒரு நிலையெடுப்பாகவே மேற்படி இரு தரப்பு இராணுவ முஸ்தீபுகள் அமைந்துள்ளன எனத் தெரிகின்றது.
கட்டுரையாசிரியர் - தி.திபாகரன்

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
