கொழும்பு கோட்டையில் திருடப்பட்ட ரஷ்ய சட்டத்தரணியின் மடிக்கணனி
இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள ரஷ்யாவை சேர்ந்த பெண் சட்டத்தரணி ஒருவரின் மடிக்கணனி கோட்டை ரயில் நிலையத்தில் வைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த மடிக்கணனி கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள நகைக்கடையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் ரயில் நிலைய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கோட்டை ரயில் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதீப் ஜயசூரிய உள்ளிட்ட குழுவினர் அதனை கைப்பற்றியுள்ளனர். ரஷ்யாவை சேர்ந்த இந்த சட்டத்தரணி கடந்த 27 ஆம் திகதி ராஜரட்ட ரஜின ரயிலில் ஏறுவதற்காக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் காத்திருந்துள்ளார்.
அப்போது ஒருவர் தனது மடிக்கணனியை திருடிச் சென்றதாக , அவர் ரயில் நிலைய பொறுப்பதிகாரியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து ரயில் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள், ரஷ்ய சட்டத்தரணியின் செல்லிடப் பேசி செயலியை பயன்படுத்தி, அந்த தகவல் ஊடாக மடிக் கணனி கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள நகைக்கடை ஒன்றில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
மடிக்கணனியை திருடிய நபரை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
மடிக்கணனியை தேடிக்கொடுத்த கோட்டை ரயில் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ரஷ்ய சட்டத்தரணியான சேமியா மைசேக் (Samia Mysek) நன்றி, தெரிவித்து, ரயில் நிலையத்தின் முறைப்பாடு மற்றும் பரிந்துரை புத்தகத்தில் குறிப்பை எழுதியுள்ளார்.



