அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகள் கடும் எச்சரிக்கை! பின்வாங்கியதா ரஸ்யா?
உக்ரைன் மற்றும் ரஸ்யாவிற்கு இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றம் அதன் நட்பு நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ஜேர்மன் சான்சலருடனான பேச்சுவார்த்தையின் பின்னர் கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“உக்ரைன் மற்றும் பிற முன்னாள் சோவியத் நாடுகளை நேட்டோவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும், ரஷ்ய எல்லைகளுக்கு அருகே ஆயுதங்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும்.
கிழக்கு ஐரோப்பாவில் இருந்து கூட்டு படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கையை அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் நிராகரித்தன. அதேசமயம், ரஸ்யா முன்பு முன்மொழிந்த பல பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, ஐரோப்பாவில் நடுத்தர தொலைவு ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கான வரம்புகள், பயிற்சிகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் பிற நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ரஸ்யா தயாராக உள்ளது.
ஆனால் மேற்கு நாடுகள் ரஸ்யாவின் முக்கிய கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஸ்யா போர் தொடுக்கவுள்ளதாக வெளியான தகவலை அடுத்து அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தன.
இவ்வாறான நிலையிலேயே, அமெரிக்கா மற்றம் அதன் நட்பு நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
எல்லையில் இருந்து முகாம்களுக்கு திரும்பும் ரஸ்ய படைகள்
இதேவேளை, உக்ரைன் எல்லையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ரஸய இராணுவ வீரர்கள் சிலர் முகாமிற்கு திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் துருப்புக்கள் எந்த பகுதியிலிருந்து பின்வாங்குகிறார்கள், எத்தனை வீரர்கள்? அவர்கள் எங்கு நிறுத்தப்படுவார்கள்? என்ற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
உக்ரைன் மீது போர் தொடுக்க தயார் நிலையில் ரஸ்யா
பெலாரஸ், கிரிமியா மற்றும் மேற்கு ரஸ்யாவில் ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டுள்ளதைப் புதிதாக வெளியாகியுள்ள செயற்கைக்கோள் படங்கள் தெளிவாக காட்டியுள்ளது. மாக்சர் வெளியிட்டுள்ள இந்த செயற்கைக்கோள் படங்களில் எல்லைப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
கிரிமியா அருகிலுள்ள விமானநிலையத்தில் அதிகளவு இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதும் தெரிகிறது. இந்த விமானநிலையம் அருகே 500க்கும் மேற்பட்ட இராணுவ கூடாரங்கள் காணப்படுகிறது.
எல்லையில் அமைந்துள்ள நூவூஜெர்னோய் என்ற இடத்தில் இராணுவ பயிற்சி நடவடிக்கைகளும் காணப்படுகிறது. பெல்லாரஸ் பகுதியிலும் இதே நிலை தான். உக்ரைனில் இருந்து 25 கி.மீ. முதல் 45 கி.மீ. வரை இராணுவத்தைக் குவித்துவருகிறது.
இவை அனைத்தையும் காட்டிலும் மேற்கு ரஸ்யாவிலும் அதிகப்படியான இராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது.
உக்ரைன் - ரஷ்யா பதற்றம்
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படுவதை தடுக்க ஐக்கிய நாடுகள் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் ரஷ்யா மீது அமெரிக்கா குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான எல்லைப் பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. 2014ம் ஆண்டு, உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. சோவியத் யூனியனில் அங்கம் வைத்த உக்ரைன் நாட்டில், மக்கள் பேசும் மொழி, கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறை உள்ளிட்டவை ரஷ்யாவை ஒத்துப் போகும்.
ஆனால், எல்லை பிரச்சினை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. உக்ரைன் நாடு ஐரோப்பிய நாடுகளுடன் நெருக்கமான உறவை கொண்டுள்ளது. இதற்கு அமெரிக்காவும் தனது ஆதரவை அளித்து வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல், உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை சிறிது சிறிதாக குவித்து வருகிறது. இதுதொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவைக் கேட்டுக்கொண்ட போதிலும், ரஷ்யா படைக்குவிப்பை நிறுத்தவில்லை.
போர் நடத்துவதற்கு தேவையான சுமார் 70 சதவீத பணிகளை ரஷ்யா செய்து முடித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் சுமார் ஒரு இலட்சம் ரஷ்ய வீரர்கள் உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.