ரஷ்யாவுடன் இணையப் போகும் மற்றுமொரு நாடு! உக்ரைனுக்கு புதிய தலையிடி
உக்ரைன், தமது நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் பட்சத்தில், ரஷ்யாவுடன் இணைந்து உக்ரைனுக்கு எதிராக போர் தொடுக்க நேரிடும் என பெலாரஸ் ஜனாதிபதி அலெக்ஸசாண்டர் லூகசென்கோ எச்சரித்துள்ளார்.
உக்ரைன் மீதான படையெடுப்பு
பெலாரஸ் நாட்டின் எல்லைக்குள் உக்ரைன் படையினர் பிரவேசித்து மக்களை கொல்ல முயன்றதால், ரஷ்யாவுடன் இணைந்து போராட தயாராக உள்ளதாக பெலாரஸ் நாட்டு ஜனாதிபதி அலெக்ஸ்சாண்டர் லூகசென்கோ கூறியுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு பெலாரஸ்சை ரஷ்ய இராணுவம் பயன்படுத்தியிருந்த நிலையில், அவரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
பெலாரஸ் மீது ஆக்கிரமிப்பு செய்யும் பட்சத்தில் பதில் நடவடிக்கை மிகவும் கடுமையானதாக இருக்கும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
இது போரை முற்றிலும் மாறுபட்ட நிலைமைக்கு எடுத்துச் செல்லும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் விஜயம்
இதேவேளை இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் எலி கோஹன் தலைநகர் கீயேவ்விற்கு விஜயம் செய்துள்ளார்.
போர்க் காலத்தில் உக்ரைனுக்கு விஜயம் செய்யும் இஸ்ரேலின் உயர்மட்ட பிரதிநிதியாக இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சரின் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீயேவ்வில் இஸ்ரேலின் தூதரகத்தை மீளத் திறக்கும் நிகழ்விலும் இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் பங்கேற்றுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு இஸ்ரேல் கண்டனம் வெளியிட்டிருந்தாலும், உக்ரைனுக்கு மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளையே இஸ்ரேல் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.