அமெரிக்கா- ஐரோப்பா உட்பட பல நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ரஷ்யா ! வெளியான அறிக்கை
சர்வதேச எரிசக்தி ஏஜென்சி (IEA) வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின் படி ரஷ்யா ஏப்ரல் 2020-க்கு பின்பு மார்ச் 2023ல் அதிகப்படியான எண்ணெய் ஏற்றுமதி அளவீட்டை பதிவு செய்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்த காரணத்தால் அமெரிக்கா, ஐரோப்பா உட்பட பல நாடுகள் ரஷ்யா உடனான வர்த்தகத்திற்கு கடுமையான தடைகளை விதித்தது. இந்த தடையை தாண்டி மார்ச் 2023ல் கடந்த 3 வருடத்தில் அதிகப்படியான ஏற்றுமதியை பதிவு செய்துள்ளது.
எண்ணெய் பொருட்களை ஏற்றுமதி செய்தல்
இந்த திடீர் உயர்வுக்கு முக்கிய காரணம் ரஷ்யா தற்போது கச்சா எண்ணெய் மட்டும் அல்லாமல் பிற எண்ணெய் பொருட்களையும் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இதன் மூலம் ரஷ்யா பிப்ரவரி மாதம் பெற்ற 12.7 பில்லியன் டொலர் வருமானத்தை காட்டிலும் கிட்டதட்ட 1 பில்லியன் டொலர் கூடுதல் வருமானத்தை பெற்றுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர்க்கு பின்பு ரஷ்யாவின் கடல் வழி ஏற்றுமதி அளவு ஒரு நாளுக்கு 0.6 மில்லியன் பேரலில் இருந்து 8.1 மில்லியன் பேரலாக அதிகரித்துள்ளது.
போருக்கு முன்பு ரஷ்யா குழாய் வழியாக கச்சா எண்ணெய், எரிவாயுவை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. இதேபோல் பெட்ரோலியம் பொருட்களின் ஏற்றுமதி வெறும் 450000 பேரில் இருந்து 3.1 மில்லியன் பேரலாக உயர்ந்துள்ளது.
மேற்கத்திய நாடுகளின் தடை
இதன் மூலம் ரஷ்யா போரிலும் முன்னேறி வருவது மட்டும் அல்லாமல் மேற்கத்திய நாடுகளின் தடைகளை உடைத்து கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முழுமையாக மீட்டு எடுத்துள்ளது. மேலும் மார்ச் ஏற்றுமதியில் 1 பில்லியன் டொலர் கூடுதல் வருமானத்தை பெற்றாலும், வருடாந்திர அடிப்படையில் 43 சதவீதம் குறைவான வருமானத்தையே ரஷ்யா பெற்று வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் தள்ளுபடியும், முழு விற்பனை அளவீட்டை அடைய முடியாதது தான்.
மார்ச் மாதத்தில் ரஷ்யா ஒரு நாளுக்கு சுமார் 2,70,000 பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்துள்ளது. இதன் மூலம் தற்போது வெறும் 9.58 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் மட்டுமே ரஷ்யா உற்பத்தி செய்து வருகிறது.
உலக நாடுகளின் தடை மட்டும் அல்லாமல் ஒரு பேரல் கச்சா எண்ணெய்-ஐ 60 டொலருக்கு மேல் விற்பனை செய்ய கூடாது என தடை விதித்துள்ள காரணத்தால் 100 டொலர் மதிப்பிலான ப்ரீமியம் கச்சா எண்ணெய்-க்கு 45 டாலர் வரையில் தள்ளுபடி கொடுத்து வருகிறது ரஷ்யா.
அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா அடுத்தடுத்து நெருக்கடியை கொடுத்தும் ரஷ்யா கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது மட்டும் அல்லாமல் இந்தியா, சீனா, மத்திய கிழக்கு நாடுகள், சோவித் யூனியனில் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏணி படியாக மாறியுள்ளது.