இலங்கை தொடர்பில் ரஷ்யா வெளியிட்டுள்ள அறிவித்தல்
தீவிரவாதத்தை இல்லாதொழிப்பதில் இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கு ரஷ்யா இணக்கம் வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பாதுகாப்புத்துறைசார் கலந்துரையாடல்களை முன்னெடுக்கும் நோக்கில் கடந்த திங்கட்கிழமை (22) கொழும்பை வந்தடைந்த ரஷ்ய பாதுகாப்புப்பேரவை செயலாளர் நிக்கோலாய் பட்ரூஷேவ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotapaya Rajapaksa), பாதுகாப்புச்செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன ஆகியோருடன் சந்திப்புக்களை நிகழ்த்தியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான சந்திப்பின்போது அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், சக்திவலு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் விரிவுபடுத்திக்கொள்வது குறித்துக் கலந்துரையாடப்பட்டதாக இலங்கையிலுள்ள ரஷ்யத்தூதரகம் தெரிவித்துள்ளது.
இதன்போது தெற்காசியப் பிராந்தியத்தில் ரஷ்யாவின் நீண்டகால நட்புறவு நாடாக இலங்கை விளங்குவதாகச் சுட்டிக்காட்டிய நிக்கோலாய் பட்ரூஷேவ், இந்த நல்லுறவு பரஸ்பர நம்பிக்கை, கௌரவம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரம்பரியமாகக் கட்டியெழுப்பப்பட்டதொன்றாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி மனிதாபிமான ரீதியான உதவி அடிப்படையில் ரஷ்ய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 'ஸ்புட்னிக் - வீ' கோவிட் - 19 தடுப்பூசிகள் தொடர்பில் நினைவுறுத்திய ரஷ்ய பாதுகாப்புப்பேரவை செயலாளர், மீள் தடுப்பூசியேற்றல் செயற்திட்டத்தின் ஓரங்கமாக மேலும் 6 மில்லியன் தடுப்பூசிகளை எதிர் வருங்காலத்தில் இலங்கைக்கு வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாகத் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட நபர்கள் மற்றும் அமைப்புக்கள் தொடர்பான தகவல்களைப் பரஸ்பரம் பகிர்தல் உள்ளடங்கலாக தீவிரவாதத்தை இல்லாதொழிப்பதில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்திக்கொள்வது பற்றி விசேட அவதானம் செலுத்தப்பட்டதாகவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இச்சந்திப்பின்போது தகவல் பாதுகாப்பு தொடர்பில் காணப்படும் அச்சுறுத்தல்கள், தகவல்களை அடிப்படையாகக்கொண்ட குற்றங்களை முடிவிற்குக்கொண்டு வருவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் நவீனபோக்குகள், இருநாட்டு இராணுவங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தல், சமூக - அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவற்றை உறுதிப்படுத்தல், தொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்புப்பெறல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

