மேற்குலக நாடுகளின் பொறிக்குள் சிக்கிய ரஷ்யா - இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்பு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமெரிக்கா, கனடா உட்பட ஐரோப்பிய நாடுகள் பல பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இதன் காரணமாக ரஷ்யாவின் பொருளாதாரம் பாரிய பின்னடைகளைவுகளை சந்திக்கவுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கான பணத்தைப் பெற்றுக் கொள்வதில் எதிர்காலத்தில் தாமதம் ஏற்படக்கூடும் என்று இலங்கைத் தேயிலைச் சபை அறிவித்துள்ளது.
அந்நாட்டிற்குத் தேயிலையை ஏற்றுமதி செய்வதில் இதுவரை எந்தப் பிரச்சினையும் இல்லை. இருப்பினும் சர்வதேச ரீதியில் கொடுப்பனவுக் கட்டமைப்பில் இருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்டுள்ளமையினால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் தேயிலையை ஆகக்கூடுதலாக கொள்வனவு செய்யும் மூன்றாவது நாடு ரஷ்யா ஆகும். கடந்த வருடத்தில் ரஷ்யாவுக்கு 29 மில்லியன் கிலோ கிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 25 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்டதாகும்.
உக்ரேனும் இலங்கையில் இருந்து தேயிலையைக் கொள்வனவு செய்கின்றது. இலங்கை தேயிலையைக் கொள்வனவு செய்யும் பட்டியலில் இது 18வது இடத்தில் உள்ளது.
கடந்த வருடத்தில் இங்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் மொத்தப் பெறுமதி 4,100 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்டதாகும்.