சீனாவுடனான இராணுவ கூட்டணி தொடர்பில் புடின் வெளியிட்ட அறிவிப்பு!
சீனாவும் ரஷ்யாவும் இராணுவ கூட்டணியை அமைக்காது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.
எனினும் சீனாவுடனான இராணுவ ஒத்துழைப்பு என்பது வெளிப்படையான ஒன்று எனவும் அவர் கூறியுள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் போது இருந்ததை போன்ற கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளை மேற்குலக நாடுகள் மேற்கொண்டுவருவதாக விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.
பிராந்திய நாடுகள்
அத்துடன் அணு ஆயுதத்தை பெலரஸ்சில் நிலைநிறுத்தும் ரஷ்யாவின் தீர்மானம் குறித்த விளாடிமீர் புடினின் அறிவிப்பு பிராந்திய நாடுகள் மத்தியில் கரிசனையை ஏற்படுத்தியுள்ளது.
பெலரஸ்சை அணு ஆயுத பணய நாடாக ரஷ்யா பயன்படுத்துவதாக உக்ரைனின் தேசிய பாதுகாப்பிற்கான செயலாளர் ஒலெக்ஸி டானிலோவ் கூறியுள்ளார்.
இந்த நிலையில் உக்ரைனும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்ப வேண்டும் என பல்கேரிய துணை ஜனாதிபதி இலிஜானா அயோரோவா கோரிக்கை விடுத்துள்ளார்.
தோல்வியின் அச்சத்தில் விளாடிமீர் புடின்
நிலைமைகள் மேலும் அதிக ஆபத்துமிக்கதாகவும் அச்சுறுத்தலானதாகவும் மாறிவருகின்றது என்பதாலேயே ஜனாதிபதி ருமென் ராதேவும் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கின்றார் என அவர் கூறியுள்ளார்.
எனினும் விளாடிமீர் புடினின் அறிவிப்பை கேலி செய்துள்ள உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் மைக்கைலோ போடோலியாக், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினின் செயற்பாடுகள் கணிக்ககூடியவை என கூறியுள்ளார். தோல்வியின் அச்சம் விளாடிமீர் புடினை பீடித்துள்ளதாகவும் இவ்வாறான தந்திரோபாய செயற்பாடுகளால் அச்சுறுத்துவதற்கு அவர் முயற்சிப்பதாகவும் உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.
விளாடிமீர் புட்டீனின் அறிவிப்பானது, மிகவும் ஆபத்தான விரிவாக்கம் என அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான சர்வதேச பிரச்சாரம் என்ற அமைப்பு எச்சரித்துள்ளது.
அணு ஆயுதங்களைப் பகிர்வது, நிலைமையை மிகவும் மோசமாக்குவதுடன், பேரழிவுகரமான மனிதாபிமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.