உக்ரைன் எல்லையில் குவிந்துள்ள ரஸ்ய படையினர்! செயற்கைக்கோள் படங்களை வெளியிட்ட அமெரிக்கா (photos)
உக்ரைன் எல்லையில் இருந்து படைகளை விலக்கிக்கொள்வதாக ரஸ்யா அறிவித்துள்ளபோதும், தொடர்ந்தும் அந்த நாட்டின் எல்லையில் ரஸ்ய படையினர் தமது நடவடிக்கைளை தீவிரப்படுத்தியுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்துகிறது.
இந்தநிலையில் அண்மையில் எடுக்கப்பட்ட அமெரிக்க விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான Maxar வழங்கிய செயற்கைக்கோள் படங்களின்படி, ரஸ்யாவின் இராணுவ நடவடிக்கை உக்ரைனின் எல்லைகளுக்கு அருகில் தொடர்கிறது என்பதைக் காட்டுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த செயற்கைகோள் படங்களின்படி உக்ரெய்ன் மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளுடனான அதன் எல்லைகளில் ரஸ்ய இராணுவ படையினர் மூன்று பக்கங்களிலும் நிலைகொள்ளச்செய்யப்பட்டுள்ளனர்.
வடமேற்கு பெலாரஸில் உள்ள பகுதியில் ஒரு புதிய கள மருத்துவமனையும் அமைக்கப்பட்டுள்ளது. ஏனைய துருப்புக்களின் செறிவு மற்றும் செயல்பாடு உக்ரைனின் எல்லையில் அதிகரித்து காணப்படுகிறது.
கள மருத்துவமனை
-------------------------------
எல்லையில் இருந்து சுமார் 30 மைல் தொலைவில் வரிசைப்படுத்தப்பட்ட தன்னியக்க பீரங்கிகள் அல்லது பெரிய காலிபர் துப்பாக்கிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
எல்லையில் இருந்து 19 மைல் தொலைவில் உள்ள ஜியாப்ரோவ்கா விமானநிலையத்தில் புதிதாக வந்த 20 தாங்கி எதிர்ப்பு ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
எனினும் ரஸ்யா உக்ரெய்னை ஆக்கிரமிக்கப் போகிறது என்பதை திட்டவட்டமாக நிரூபிக்கும் எதுவும் இந்தப் படங்களில் இல்லை.
இந்தநிலையில் ஆக்கிரமிப்பு தனது நோக்கம் அல்ல என்றும், அது மேற்கத்திய பிரசாரத்தின் ஒரு பகுதி என்றும் ரஸ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
எனினும் நேட்டோ பாதுகாப்புத் தலைவர்கள், ஜனாதிபதி புடின் உத்தரவை வழங்கினால், படையெடுப்பை நடத்துவதற்கு உக்ரைனைச் சுற்றி போதுமான படைகள் ரஸ்யாவிடம் இருப்பதாக நம்புகின்றனர்.



