அமெரிக்கா, சர்வதேச சட்ட ஒழுங்கையே ஆபத்தில் ஆழ்த்துவதாக குற்றச்சாட்டு
அமெரிக்க அரசாங்கம், சர்வதேச சட்ட ஒழுங்கையே ஆபத்தில் ஆழ்த்துவதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது.
இஸ்ரேலை இலக்கு வைத்து நடவடிக்கை எடுத்ததாகக் கூறி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் இரண்டு நீதிபதிகள் மீது அமெரிக்கா தடைகள் விதித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இதனை அறிவித்துள்ளார்.
இதன் மூலம், அமெரிக்க தடைகளின் கீழ் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உயர் அதிகாரிகள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

“இன்று, ஜார்ஜியாவைச் சேர்ந்த கோச்சா லோர்ட்கிபனிட்ஸே மற்றும் மங்கோலியாவைச் சேர்ந்த எர்டெனெபல்சுரென் டாம்டின் ஆகிய நீதிபதிகளை, நிறைவேற்று உத்தரவு 14203-ன் கீழ் நான் பட்டியலிடுகிறேன் என மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார்.
இந்த உத்தரவிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டதாக ரூபியோ குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் குடிமக்களை விசாரிக்க, கைது செய்ய, தடுத்து வைக்க அல்லது வழக்குத் தொடர சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் எடுத்த முயற்சிகளில் இந்த நீதிபதிகள் நேரடியாக ஈடுபட்டதாக ரூபியோ குற்றம்சாட்டினார். இஸ்ரேலின் ஒப்புதல் இன்றி இந்த விசாரணைகள் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த ஆண்டு நான்காவது தடைகள் சுற்று என குறிப்பிடப்பட்டுள்ள இந்நடவடிக்கையை “நியாயமான நீதித்துறை நிறுவனத்தின் சுயாதீனத்துக்கு நேரான வெளிப்படை தாக்குதல்” என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கண்டித்தது.
இந்த தடைகள் சர்வதேச சட்ட ஒழுங்கையே ஆபத்தில் ஆழ்த்தும் எனவும் எச்சரித்துள்ளது.
அமெரிக்க தடைகளின் படி, பட்டியலிடப்பட்ட நபர்களின் அமெரிக்காவிலுள்ள சொத்துகள் முடக்கம், மேலும் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அமெரிக்கா பயணத் தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri