ஊழல் மோசடிகளுக்கு இனிமேல் இடமில்லை: ரொஷான் ரணசிங்க திட்டவட்டம்
ஐக்கிய தேசியக் கட்சியையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் மீண்டும் கட்டியெழுப்ப முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பொலனறுவையில் இன்று(05.08.2024) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசு திருடர்களை விரட்டி திருடர்களைப் பிடிப்பதற்காக மக்களை நியமித்தது. அது நடக்காத காரணத்தால் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக நியமித்தது.
இந்த நாட்டில் ஊழல், மோசடிகளுக்கு இனி இடமில்லை. புதிய வேலைத்திட்டத்துடன் இந்த நாடு கட்டியெழுப்பப்பட வேண்டும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக உலகம் அறிந்த ஒருவரை முன்னிறுத்த வேண்டும்.
பொதுஜன பெரமுனவைக் கட்டியெழுப்பக் கடுமையாக உழைத்தவர்கள் இருக்கின்றார்கள். அத்தகைய ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது நல்லது.
நான் அமைச்சுப் பதவிக்காக முன்னும் பின்னுமாக குதிப்பவன் அல்லன். நாட்டின் எந்த மாவட்டத்தில் இருந்தும் சுதந்திரமாக நின்று நாடாளுமன்றம் செல்வேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |