நோர்வேவுக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ நீக்கம்: பயிற்சியாளர் ஜோர்ஜ் ஜேசஸ் விளக்கம்
நோர்வே அணிக்கு எதிரான கால்பந்து போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவை விளையாட வைக்காமல் ஒதுக்கி வைத்தமை சரியான தீர்மானமே என போர்த்துக்கல் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜோர்ஜ் ஜேசஸ் தெரிவித்துள்ளார்.
இப்போட்டியைத் தொடர்ந்து ரொனால்டோ தேசிய அணியின் பயிற்சி முகாமில் இருந்து வெளியேறியுள்ள நிலையிலேயே பயிற்சியாளர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
தமது தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும், அணி நிர்வாகத்தின் இந்த முடிவிற்குத் தாம் முழுமையாகக் கட்டுப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எடுக்கப்பட்ட தீர்மானம்
அண்மையில் நோர்வே அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோவை முழுமையாகப் மாற்றுவீரர்களின் வரிசையில் அமரவைத்த பயிற்சியாளர் ஜேசஸ், டென்மார்க்கிற்கு எதிரான போட்டியிலும் அவரை ஆரம்ப வீரராகக் களமிறக்கப்போவதில்லை எனத் தெரிவித்திருந்தார்.

இதனால் அதிருப்தியடைந்த ரொனால்டோ, பயிற்சிகளில் பங்கேற்காமல் மைதானத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள ரொனால்டோ, பயிற்சியாளரின் கருத்துக்களைத் தொடர்ந்து தாம் அணியிலிருந்து விலகத் தீர்மானித்ததாகவும், இதற்கான உண்மையான காரணங்களை விரைவில் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
போர்த்துக்கல் கால்பந்து வரலாற்றில் ரொனால்டோ இவ்வாறு பயிற்சிகளைப் புறக்கணித்து வெளியேறியமை இதுவே முதல்முறையாகும். அதேவேளை, ரொனால்டோ இல்லாமல் ஏனைய 24 வீரர்களுடன் எதிர்வரும் போட்டிகளுக்கான பயிற்சிகள் தொடரும் என போர்த்துக்கல் கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
இவ்வாண்டுடன் தமது சர்வதேச கால்பந்துப் பயணத்தை நிறைவுசெய்யப் போவதாக ரொனால்டோ ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்த நிலையில், அவர் மீண்டும் போர்த்துக்கல் அணிக்காக விளையாடுவாரா என்பதில் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.