அதிகரித்துள்ள போர் பதற்றம் : 80,000 ரொக்கெட் குண்டுகளை உக்ரைனுக்கு அளிக்கவுள்ள கனடா
உக்ரைன் - ரஷ்யா போர் அடுத்த கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது பிரித்தானியாவை அடுத்து கனடாவும் உக்ரைனுக்கு ரொக்கெட் குண்டுகளை அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடா தம்மிடம் உள்ள ரொக்கெட் குண்டுகளில் 80,840 எண்ணிக்கையை உக்ரைனுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. அத்துடன், ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் 1300 ஆபத்தான கருவிகளையும் உக்ரைனுக்கு அனுப்ப உள்ளது.
குறித்த தகவலை கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தார். ஜூன் மாதம் 2,160 ரொக்கெட் குண்டுகளை கனடா உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது.
இராணுவ உதவிகள்
இந்நிலையில் கனடா அனுப்பியுள்ள CRV7 ரொக்கெட் குண்டுகளானது உயிரியல் அல்லது அணு ஆயுதங்களை பொருத்தக்கூடியது என்றும், குறித்த குண்டுகளால் டாங்கிகள், கட்டிடங்கள் அல்லது இராணுவ வீரர்கள் மீதும் தாக்குதலை நடத்த முடியும் என்றே நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, 64 Coyote கவச வாகனங்கள் உட்பட பல்வேறு ஆயுதங்களை கனடா ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளது. 2022 பிப்ரவரி மாதம் ரஷ்யா ஊடுருவலை முன்னெடுத்ததன் பின்னர் சுமார் 3.3 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு இராணுவ உதவிகளை முன்னெடுக்க கனடா உறுதி அளித்திருந்தது.
ஓகஸ்ட் 6ஆம் திகதி ரஷ்யாவுக்குள் அதிரடியாக உக்ரைன் ஊடுருவலை முன்னெடுத்த பின்னர் ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து அடிக்கடி தங்கள் கருத்தை தெரிவித்து வருகிறது.
மேலும், இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், ரஷ்யா எதிர்கொள்ளும் மிகப்பெரிய நெருக்கடி இதுவென்றே கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |