பேருந்தில் தனியாக பயணிப்பவர்களுக்கு மயக்க மருந்து கொடுக்கும் கும்பல் - பொலிஸார் எச்சரிக்கை!
யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு நகரத்திலிருந்து மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு தனியாக பேருந்தில் பயணிக்கும் பிரயாணிகள், மயக்கமருந்து கலந்த பிஸ்கட் கொடுத்து கொள்ளை செய்யப்படுவதற்கான சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் கொள்ளையர்களிடம் விழிப்பாகவும், அவதானமாகவும் இருக்குமாறு கிழக்கு மாகாணப் பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் எச்சரித்துள்ளார்.
மயக்க மருந்து கொடுத்து கொள்ளை
இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு பயணிக்கும் பிரயாணிகளுக்கு, பேருந்து வண்டிகளில் பிரியாணிகள் போன்ற வேடமிட்டு கொள்ளையர்கள் பிஸ்கட் கொடுக்கின்றனர்.

அந்த பிஸ்கட்டுகளில் மயக்கமருந்து கலக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் அருகில் சென்று பேச்சு கொடுத்து, தமது பையில் இருந்து மயக்கமருந்து கலந்த பிஸ்கட்டை பயணிகளுக்கு வழங்குவார்கள்.
பயணிகள் அதனை உடைத்து சாப்பிட்டதும் சிறிது நேரத்தில் மயக்கமடைந்து, அவர்கள் அணிந்திருக்கும் காப்பு மோதிரம், சங்கிலி, தங்க ஆபரணங்கள் மற்றும் கைபையில் உள்ள பணம் கொள்ளையர்கள் எடுத்துக் கொண்டு ஏதாவது இடத்தில் இறங்கி விடுவார்கள்.
3 நாட்களுக்கு பின் சுயநினைவு
மயக்கமடைந்தவர்கள் பின்னர் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு, 3 தினங்களுக்கு பிறகு தான் சுயநினைவுக்கு வருகிறார்கள்.

அண்மை காலமாக, பேருந்துகளில் பிரயாணித்த பலர் மீது இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனவே, குறிப்பிட்ட மாவட்டங்களில் தனியாக பயணம் செய்யும் பொதுமக்கள், அறிமுகம் இல்லாதவர்களிடம் எதையும் வாங்கி சாப்பிடக்கூடாது, மேலும் விழிப்பாகவும், அவதானமாகவும் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
