முல்லைத்தீவு குருந்தூர் மலைக்கான வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்(Photos)
நில ஆக்கிரமிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, குருந்தூர் மலைக்கான ஒரு பாதையாக அமைந்துள்ள தண்ணிமுறிப்பு - குமுழமுனை வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த வீதியின் புனரமைப்பு பணிகள் கட்டம் கட்டமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குருந்தூர் மலைக்கான பாதை
இந்த பாதை குமுழமுனை, ஆறுமுகத்தான்குளம், தண்ணிமுறிப்பு ஆகிய ஊர்களை ஊடறுத்து சென்று மறுபுறம் தண்டுவான் தொடுப்பை ஏற்படுத்துகிறது.
குமுழமுனையை அடுத்து அமைந்துள்ள ஆறுமுகத்தான்குளம்,முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய கிராமங்களில் ஒன்றாகும்.
இந்த கிராமத்தின் ஊடாகவே தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைக்கு செல்லும் பாதை அமைந்துள்ளது.
தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ் உள்ள வயல் நிலங்களுக்கான பிரதான பாதைகளில் ஒன்று இந்த கிராமத்தை ஊடறுத்துச் செல்கின்றது.
வீதி புனரமைப்பு பணிகள்
இதற்கமைய 04/09/2023 அன்று ஆறுமுகத்தான்குளம் ஊரின் ஊடாக செல்லும் இந்த வீதியின் சுமார் 7 km நீளமான பாதையின் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஆறுமுகத்தான்குளம் தெற்கு சுற்று வீதி பிரியும் சந்தியில் இருந்து தொடங்கப்பட்டுள்ள புனரமைப்பு பணிகள் 7 km தூரத்தினை,நவம்பர் மாதம் 27 ஆம் திகதிக்குள் முடிப்பதற்கு எதிர் பார்க்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் நிறைவேற்றப்படும் இந்த பணிகள், முல்லைத்தீவு மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைபடுத்தப்படுகின்றது.
சுமார் 17.5 மில்லியன் நிதியொதுக்கீட்டின் கீழ் திட்டமிட்ட இந்த அபிவிருத்திக்கான நிதி வடமாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையில் இருந்து பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீண்ட காலத்தின் பின்னர் இந்த ஊரின் வீதிகள் புனரமைக்கப்படுவது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புனரமைப்பின் மூலம் தங்கள் பயணங்கள் இலகுவாக அமைந்துவிடம் எனவும் ஊரும் புதுப்பொலிவுடன் மிளிரும் என அந்த ஊரின் சமூகச் செயற்பாட்டாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.