முல்லைத்தீவில் 70 வருடங்களாக புனரமைக்கப்படாத பிரதான இணைப்பு வீதி(Photos)
தண்ணீரூற்று குமுழமுனை வீதியை கணுக்கேணி குளத்திற்கு அண்மையில் முல்லைத்தீவு திருகோணமலை வீதியுடன்(B297) இணைக்கிறது உடுப்புக்குளம் முறிப்பு இடைப்பாதை.
1950 ஆம் ஆண்டில் உருவான இந்த கிராமத்தின் பாதை இதுவரை முழுமையாக ஒரு தடவை கூட திருத்தப்பணிகள் எதனையும் கண்டுகொள்ளாத வீதியாக இந்த இணைப்பு வீதி இருக்கின்றது என உடுப்புக்குளம், முறிப்பு கிராமத்தில் உள்ள வயது முதிந்தோர் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இடர் மிகுந்த பயனம்
மழைக்காலத்தில் நீரும் சகதியுமாக இருக்கும் இந்த வீதி கோடை காலங்களில் மணலாக இருக்கின்றது.
பயணிப்பதற்கு வீதி அதிக இடர்பாடுகளை தருவதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுச் சொல்கின்றனர்.
அரசு உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் என பலர் நேர முகாமைத்துவத்தை பேண வேண்டிய சூழலில் இந்த வீதியை பயன்படுத்தி அதிக சிரமங்களை எதிர்கொள்வதாக பணிசார் நபர்கள் தங்கள் சிரமங்களை குறிப்பிடுகின்றனர்.
தண்ணிமுறிப்பில் விவசாயத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் மற்றும் தண்ணீரூற்றுக்கு செல்வதற்காக இந்த வீதியை பயன்படுத்தும் உடுப்புக்குளம், முறிப்பு, கொத்தியாகாமம், மற்றும் அளம்பில், செம்மலையைச் சேர்ந்த மக்களில் பலரும் இந்த வீதி புனரமைக்கப்பட வேண்டும் என தங்களுடைய கருத்துகளையும் பதிவிட்டுள்ளனர்.
கைவிடப்பட்ட அபிவிருத்தி வேலைகள்
4 கிலோமீற்றர் தூரத்தை தன் மொத்த நீளமாக கொண்ட இந்த இணைப்பு வீதியில் 1.5 கிலோமீற்றர் தூரம் பயணிக்க முடியாதளவுக்கு சிதைந்துள்ளதாக கிராமத்தின் அபிவிருத்திச் சங்க உறுப்பினர் ஒருவர் எடுத்துரைத்துள்ளார்.
மேலும், திருத்தாத பகுதியாக முறிப்பு கிராமத்தில் உள்ள வீதியே இருப்பதாகவும் ஏனைய பகுதிகள் தார் இடப்பட்டு செப்பனிடப்பட்டு பயனிப்பதற்கு இலகுவாக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடுகின்றார்.
முறிப்பு பகுதியில் உள்ள வீதியை திருத்துவதற்கு பல முறை திருத்தப்பணிகளை கட்டம் கட்டமாக மேற்கொண்டிருந்த போதும் அவை முழுமையடைவதில்லை.
அதிக நீரோட்டமுள்ள பகுதிகளும் இந்த இணைப்பு வீதியில் அமைந்துள்ளது.மழைக்காலங்களில் ஏற்படும் அதிகளவான நீரோட்டத்தினால் அரிப்புக்குள்ளாகி வீதி பழுதடைகின்றது.
வீதியின் இரு பக்கங்களிலும் சீமெந்து தடுப்பு சுவர் அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சியின் திட்ட வேலைகள் இடையில் கைவிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
[D91Q8 ]
நீர் ஊற்றுக்களிலிருந்து ஊறிவரும் நீர் கோடைக்காலத்திலும் வீதியை வழிமறித்து பாயும் நிலை இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பிரதான வீதிகளை இணைத்தல்
பிரதான பெருந்தெருக்களை இணைக்கும் சிறு வீதிகளை அபிவிருத்தி செய்யும் பொருட்டு முன்னெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் செயற்திட்டம் பல கிராமங்களிற்கு சென்று சேர்ந்த போதும் முறிப்பு கிராமம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவே தாம் நினைப்பதாக அந்த கிராமத்தின் பலர் தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்துள்ளனர்.
இந்த வீதியை சரிசெய்து பயன்பாட்டுக்கு விடும் போது நேரம் வீணாவது தடுக்கப்படுவதோடு கிராமும் அபிவிருத்தி நோக்கிய திசையில் விரைவாக பயனிக்க ஏதுவாகும் என சமூக ஆர்வலர் ஒருவர் குறிப்பிட்டார்.
மேலும், உரிய தரப்பினர் இது விடயத்தில் கவனம் எடுத்து செயற்பட்டால் இனிவரும் காலங்களிலேனும் உருப்படியான மாற்றங்கள் ஏற்படும் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உரிய அரசு அதிகாரிகள் பாராமுகமாக செயற்படுவதனாலேயே முறிப்பு உடுப்புக்குளம் இணைப்பு வீதி நீண்ட காலமாக புனரமைக்கப்படாது இருக்கின்றது என்பதும் நோக்கத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






