யாழில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த வீதி திறந்து வைப்பு
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த வீதியானது இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.
அச்சுவேலியில் இருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கி செல்கின்ற வீதியே இவ்வாறு முழுமையாக இன்று காலை 6.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், பயணிகள் பேருந்துகள், பொதுமக்கள் என பலரும் மிகவும் மகிழ்ச்சியாக இந்த வீதியால் பயணிப்பதை அவதானிக்க முடிந்தது.
அதிஉயர் பாதுகாப்பு வலயத்தின் அறிவித்தல் இந்த வீதியானது பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இராணுவக் குடியிருப்பினூடாகச் செல்லும் வீதியாகும்.
காணொளி - தீபன்
விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்
இந்த வீதியினூடாகப் பயணிக்கும் அனைவரும் கீழ்க்காணும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுதல் வேண்டும்.
1. வீதி திறக்கப்படும் நேரம் மு.ப 06.00 தொடக்கம் பி.ப 05.00 வரை மாத்திரமே.
2. வீதியினுள் பயணிக்கும் வாகனங்கள் இடையில் நிறுத்துதல், திருப்புதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
3. வீதியில் பயணிக்கும் சந்தர்ப்பத்தில் வீதியின் இருபுறமும் புகைப்படம் எடுத்தல் ஒளிப்பதிவு செய்தல் போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளது.
4. இந்த வீதியில் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் தவிர்ந்த ஏனைய பாரவூர்திகள் பயணிக்கத் தடை.
5. இந்த வீதியில் செல்லக்கூடிய வேகம் ஆகக்கூடியது 40 கி.மீ மாத்திரமே.
6. இந்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் அனைவரும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய ஆவணங்களை பயணத்தின் போது வைத்திருத்தல் அவசியமாகும்.
மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை மீறுதல் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளக் கூடிய குற்றமாகும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



