மோட்டார் சைக்கிள்களில் சாகசம் காட்டிய இளைஞர்களுக்கு நேர்ந்த கதி! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் ஒற்றைச் சக்கரத்தில் வாகனங்களை செலுத்தி சாகசம் காட்டிய 6 இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொரகஹஹேன, ஹொரணை போன்ற பகுதிகளில் வசிக்கும் ஆறு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக ஹொரணை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நிலையில், ஒவ்வொருவருக்கும் தலா 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் சாரதி அனுமதிப்பத்திரத்தையும் ஒரு வருடத்திற்கு இடைநிறுத்தவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மேலும், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளை பொலிஸாரின் பொறுப்பில் வைக்குமாறும் உத்தரவிட்ட நீதவான், பிள்ளைகள் தொடர்பிலும், அவர்கள் செல்லும் இடங்கள் தொடர்பிலும் பெற்றோர் மிகவும் பொறுப்புடன் இருக்குமாறும் எச்சரித்துள்ளார்.
மொரகஹஹேன பிரதேசத்தில் இளைஞர்கள் குழுவொன்று பொதுமக்களுக்கு இடையூறாகவும், மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் ஒற்றை சக்கரத்தில் வாகனங்களை செலுத்தி சாகசம் செய்வதாக மொரகஹஹேன பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், பொலிஸார் குறித்த இளைஞர்களை சுற்றிவளைத்துள்ளனர்.
குறித்த இளைஞர்கள் ஒற்றைச் சக்கரத்தில் வாகனங்களை செலுத்தி சாகசம் காட்டி காணொளிகளாகவும் பதிவு செய்துள்ளனர்.
இன்றைய இளைய சமூகத்தினர் போதைப்பொருள் பாவனையினால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதுடன்,மற்றுமொரு பிரிவினர் ஒற்றைச்சக்கரங்களில் மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டிகளை செலுத்துவதை பொழுது போக்காக மாற்றியுள்ளனர்.
இது அவர்களின் உயிருக்கு மாத்திரமன்றி வீதியில் பயணிக்கும் ஏனையவர்களின் உயிருக்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது என பொலிஸார் முன்வைத்த குற்றச்சாட்டிற்கமைய, குறித்த இளைஞர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.