கற்பிட்டி பகுதியில் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மனதை உருக்கும் சம்பவம்
கற்பிட்டி - நுரைச்சோலை ஜூம்ஆ மஸ்ஜிதுக்கு முன்பாக இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இரு நபர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கற்பிட்டி - தலவில பகுதியைச் சேர்ந்த வர்ணகுலசூரிய யூட் நிசாந்த (வயது 36) எனும் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றுமுன்தினம் (19.10.2023) இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்த சிறுவனின் தந்தையே நேற்று (20.10.2023) உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கற்பிட்டி பகுதியிலிருந்து பாலாவியை நோக்கிப் பயணித்த மகேந்திர ரக லொறியும் எதிர்த் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
மோட்டார் சைக்கிளில் ஐந்து வயது சிறுவன் உட்பட மூவர் பயணித்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் உட்பட மூவரையும் சிகிச்சைக்காக அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் சேர்த்தனர்.
இதன்போது, விபத்தில் படுகாயமடைந்த 5 வயது சிறுவன் நேற்றுமுன்தினம் இரவே
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், விபத்தில் படுகாயமடைந்த இருவரும் புத்தளம் தள வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இந்தநிலையிலேயே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இருவரில் ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நேற்றுமுன்தினம் உயிரிழந்த சிறுவனின் தந்தையே நேற்று உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. மேலும் விபத்தில் படுகாயமடைந்த மூன்றாவது நபர் தொடர்ந்தும் வருகின்றார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
ஆரம்பக்கட்ட விசாரணை
விபத்தில் உயிரிழந்த சிறுவனின் தாயார் வெளிநாட்டில் தொழில் புரிந்து வரும் நிலையில், தந்தையின் பராமரிப்பில் சிறுவன் வாழ்ந்து வந்த நிலையில் சிறுவனும், தந்தையும் இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்து நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் நேற்று அம்மம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது என்று புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற சாரதி, முறையற்ற வகையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த விபத்து சம்பவம் இடம்பெற்ற விதம் பற்றி வீதியோரத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.ரி.வி கமராவிலும் பதிவாகியுள்ளது. விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி சுனில் தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.