மரணத்திற்கு வழிவகுக்கும் தீவிரமான நிலை..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் கனமழையுடன் கூடிய வானிலை மாற்றங்கள் காரணமாக குழந்தைகளிடையே நோய் பரவுவதற்கான அதிக வாய்ப்புள்ளதாக குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா கூறியுள்ளார்.
நிலவும் கடும் வெப்பத்தால் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படக்கூடும் என்றும், எனவே அதிக தண்ணீர் அருந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, ஒரு சராசரி வயது வந்தவர் ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்துமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ள தகவல்
மேலும், குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கும்போது, பெற்றோர்கள் அவர்களின் உடல் எடைக்கு ஏற்ப தண்ணீர் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நீண்ட காலமாக போதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது சிறுநீரக பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கின்றது என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தண்ணீர் அருந்தாமல் வெளிப்புற வேலைகளில் ஈடுபடுவது, சுற்றுலா செல்வது போன்றவை வெப்பத்தாக்கம், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்றும், இது மரணத்திற்கு வழிவகுக்கக்கூடிய ஒரு தீவிரமான நிலை என்றும் கூறியுள்ளார்.
முக்கிய அறிவுறுத்தல்
எனவே, வீட்டை விட்டு வெளியே செல்லும்போது தண்ணீர் எடுத்துச்செல்லுமாறு அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த காலகட்டத்தில் வயிற்றுப்போக்கு பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீரும் சுத்தமான உணவும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு இனிப்புப் பானங்கள் மற்றும் தின்பண்டங்களைக் கொடுப்பதைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக எலுமிச்சை, ஆரஞ்சு, கஞ்சி மற்றும் சூப் போன்ற இயற்கை திரவங்களைக் குடிக்கக் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.