அடுத்தடுத்து தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்
காசா போரில் ஈடுபடுத்தப்பட்ட இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் அடுத்தடுத்து தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெற்கு இஸ்ரேலில் உள்ள Sde Teiman இராணுவ தளத்தில் இஸ்ரேலிய இராணுவ வீரர் தன்னைதானே சுட்டுக்கொண்டு தவறான முடிவெடுத்துக்கொண்டுள்ளார்.
தவறான முடிவு
இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இந்த இராணுவ தளத்திற்கு வந்தார்.
இவரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் கடந்த மாதம் காசாவில் நடந்த குண்டுவெடிப்பில் பலியாகியுள்ளார். சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இவருக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டது.
கோலானி பிரிகேட்டின் உறுப்பினரான இந்த வீரர், இராணுவத்தினரால் விசாரிக்கப்பட்ட பின்னர் தவறான முடிவெடுத்துக்கொண்டுள்ளார்.
தூங்கிக்கொண்டிருந்த மற்றொரு வீரரின் துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இஸ்ரேலிய இராணுவம்
இவருக்கு முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை, காசா போரினால் ஏற்பட்ட மனநலப் பிரச்சினைகள் காரணமாக வடக்கு நகரமான சபீட்-க்கு அருகிலுள்ள ஒரு காட்டில் ரிசர்வ் வீரர் ஒருவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளார்.
இஸ்ரேல் ஹயோம் செய்தித்தாளின் புள்ளிவிவரங்களின்படி, 2024 ஆம் ஆண்டில் 21 வீரர்கள் தற்கொலை செய்துக்கொண்டனர்.
இது குறித்து இஸ்ரேலிய இராணுவம் மனநல ஆலோசனைக்கான உதவி மையங்களை நிறுவி, மனநல ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.
இருப்பினும், போர் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தால் வீரர்கள் பாதிக்கப்படுவது தொடர்கிறது என கூறப்படுகின்றது.