பூந்தோட்டம் பகுதியில் அதிகரிக்கும் சமூக விரோத செயற்பாடுகள்: நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
வவுனியா - பூந்தோட்டம் சந்தி பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் சமூகவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று பூந்தோட்டம் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் இன்று (24) காலை இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக அந்த சந்தியை பயன்படுத்தும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்து கொள்வதும் அங்கு இடம்பெறும் ஜனநாயக விரோதமான செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதனையும் நோக்கமாக கொண்டு குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் ஒன்று கூடும் ஒரு சில இளைஞர்களால் அந்தப்பகுதியைப் பயன்படுத்தும் பொதுமக்கள் அசௌகரியங்களைச் சந்திப்பதுடன், மதுபோதையில் நிற்கும் அவர்கள் பெண்களுடன் அநாகரிகமான முறையில் நடந்துகொள்வதுடன், தகாத வார்த்தை பிரயோகங்களையும் பயன்படுத்துவதாகப் பொதுமக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் வவுனியா நகருக்குத் தொழிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் பலரிடம் குறித்த நபர்கள் பணத்தினை பறிப்பதாகவும், வியாபார நிலையங்களில் பொருட்களைக் கொள்வனவு செய்பவர்களிடம் வம்புச்சண்டை செய்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனவே பூந்தோட்டம் சந்தி பகுதியினை பயன்படுத்தும் பொதுமக்களின் நன்மை கருதி இவ்வாறான சம்பவங்களைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குக் குறித்த கலந்துரையாடலில் ஏகமானதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் முதற்கட்டமாகக் குறித்த பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நபர்கள் தொடர்பாக, வடமாகாண ஆளுநர் மற்றும் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர், வன்னி மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர், மாவட்ட அரச அதிபர் ஆகியோருக்கு பொதுமக்களின் கையெழுத்தடங்கிய மகஜர் ஒன்று அனுப்புவதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்திற்கு உரிய தரப்புக்களால் தீர்வுகள் எவையும் கிடைக்கப்பெறாவிடில் வர்த்தகர்கள் , பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாற்று நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் பூந்தோட்டம் வர்த்தகர்கள், பொது அமைப்புக்கள், அயல்
கிராமத்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.



பிக்பாஸ் 9 நிகழ்ச்சி முடிந்த கையோடு போட்டியாளர்கள் எங்கே சென்றுள்ளார்கள் பாருங்க... போட்டோ இதோ Cineulagam