பிரித்தானியாவில் 2வது நாளாகவும் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கையில் உயர்வு!
கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு குறித்த அச்சம் தலைதூக்கியுள்ள நிலையில், பிரித்தானியாவில் இரண்டாவது நாளாகவும் நாளாந்தம் கோவிட் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 30,215 புதிய கோவிட் வழங்குகள் பதிவாகியுள்ளதாகவும், 86 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக ஆறு நாட்கள் கோவிட் வழக்குகள் குறைவாக பதிவாகியிருந்த நிலையில், நேற்றைய தினம் 29,312 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இன்றைய தினம் 30,215 புதிய கோவிட் வழங்குகள் பதிவாகியுள்ளது. 86 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, பிரித்தானியாவில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 130,086 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக கோவிட் வழக்குகளின் எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்ட போதிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் 10 வீதமாக குறைந்துள்ளது.
மார்ச் மாதத்திற்கு பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை 138 பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்தனர். இந்நிலையில். கடந்த ஏழு நாட்களில் இறப்புகள் 14 வீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் 33,334 பேர் கோவிட் தடுப்பூசியின் முதல் அளவை பெற்றுக்கொண்டுள்ளதாகவும், 165,669 பேர் தடுப்பூசியின் இரண்டாவது அளவை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இங்கிலாந்தின் மொத்த மக்கள் தொகையில் வயது வந்தவர்களி 73.5 வீதமானோர் தற்போது தடுப்பூசியின் இரண்டு அளவுகளை பெற்றுக்கொண்டுள்ளதாகவும், 89 வீதமானோர் முதல் அளவை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இங்கிலாந்தில் உள்ள 16 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் முதல் அளவு தடுப்பு மருந்தை பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்கள் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், விரைவில் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே, இங்கிலாந்தில் கோவிட்-19 தொற்றுடன் வைத்தியசாலையில் உள்ளவர்களில் ஐந்தில் ஒருவர், 18 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையின் புதிய தலைமை நிர்வாகி அமண்டா பிரிட்சார்ட் இதனை தெரிவித்துள்ளார். சுமார் 1,000 இளைஞர்கள் தற்போது மருத்துவமனையில் உண்மையில் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.