பிரித்தானியாவில் எரிபொருள் நெருக்கடி! - லண்டனில் பெற்ரோல் விலை உயர்வு
பிரித்தானியாவில் எரிபொருள் நெருடிக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், லண்டனில் பெட்ரோல் விலை லீட்டருக்கு சுமார் 3 பவுண்ட்ஸ் வரை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், தலைநகர் லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் பெட்ரோல் கையிருப்பு வீதம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக பெட்ரோல் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு எரிவாயு நிலையம் தற்போதைய நெருக்கடியைப் பணமாக்குவதற்கு முற்பட்டுள்ளதாகவும், அதன் விலையை சாதாரண சராசரியை விட இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், பெட்ரோல் விலை அதிகரிப்பை மக்கள் கண்டுகொள்ளவில்லை எனவும், எந்த விலையும் கொடுத்து எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கடந்த 10 நாட்களாக எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது, இந்நிலையில், திங்கள்கிழமை முதல் படைவீரர்கள் நெருக்கடியை எளிதாக்கும் முயற்சியாக எரிபொருளை விநியோகித்து வருகின்றனர்.
எவ்வாறாயினும், நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் நிலைமை 'சீராகி வருவதாகவும், முன்னெச்சரிக்கையாக' இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் தெரிவித்துள்ளார்.
எனினும், பிரித்தானியாவின் சில பகுதிகளில் தற்போதைய நிலை 'ஒரு பெரிய பிரச்சனையாக' மாறியுள்ளது என பெட்ரோல் சங்கத்தின் தலைவர் பிரையன் மேடெர்சன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரித்தானியாவில், கடந்த சில நாட்களாக எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டிருந்ததுடன், சில எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியேற்பட்டது.
தொற்றுநோய் மற்றும் பிரெக்சிட் உள்ளிட்ட பல காரணிகளால் பிரித்தானியாவில் லாறி ஓட்டுநர்கள் பணியில் கடும் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தற்போது எரிபொருள் மற்றும் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை பூர்த்தி செய்ய வேண்டுமானால் சுமார் 100,000 ஓட்டுனர்கள் தேவை என அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.