சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை திடீர் உயர்வு!
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 110 டொலர்களை நெருங்கியுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் தீவிரமடைந்து வருவது மற்றும் எண்ணெய் விநியோகக் கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கடந்த மே மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக சர்வதேச சந்தையில் பிரென்ட் (Brent) மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 110 டொலர்களை நெருங்கியுள்ளது.
விலை உயர்வு
அமெரிக்க WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று *101 டொலராக இருந்தது. இதன்படி, இந்த வாரத்தில் மட்டும் பிரென்ட் மசகு எண்ணெய் 4.9% மற்றும் WTI மசகு எண்ணெய் 10.4% அளவுக்கு உயர்ந்துள்ளன.

இந்த உயர்வுக்கான காரணங்களாக, ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்த்து சர்வதேச சந்தைக்கு எண்ணெயை அனுப்ப பயன்படும் சவூதி அரேபியாவின் முக்கிய துறைமுக நகரமான 'யான்பு' (Yanbu) திசையை நோக்கி ஏவுகணை ஓன்று ஏவப்பட்டுள்ளமை அமெரிக்காவின் துறைமுக முற்றுகை மற்றும் தடைகளுக்குப் பதிலடியாக ஹோர்முஸ் நீரிணை வழியே செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளமை உக்ரைன் நடத்திய ஆளில்லா தாக்குதலால் ரஷ்யாவின் 'ரியாசான்' (Ryazan) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் முதன்மைச் சுத்திகரிப்பு பிரிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமை என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.