அரிசி தட்டுப்பாடு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் நாட்டில் பச்சை அரிசி மற்றும் ‘நாடு’ அரிசிக்கு கடும் பற்றாக்குறை உருவாகும் அபாயம் இருப்பதாக மரதகமுல சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி விலைகள் மேலும் உயரக்கூடும் என அந்த சங்கத்தின் தலைவர் பி.கே. ரஞ்சித் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
அரிசி விலைகள் அதிகரிப்பு
தற்போது மரதகமுல சந்தையில் முதல் தர ‘நாடு’ அரிசி ஒரு கிலோவின் மெத்த விற்பனை விலை அதிகபட்சம் 225 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.
சிகப்பு பச்சை அரிசி 208 ரூபா முதல் 212 ரூபா வரை, சிவப்பு அரிசி வகைகள் 205 ரூபா முதல் 210 ரூபா வரை காணப்படுகின்றன. ஆனால் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிகள் மிகவும் அதிக விலையில் உள்ளன.
கீரி சம்பா ஒரு கிலோ 340 ரூபாவை தாண்டியுள்ளது. சம்பா 260 ரூபாவை கடந்துள்ளது.
சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி விலைகள் உயர்ந்தவுடன், அந்த அரிசிகளை சந்தையில் அதிகமாக வெளியிடும் போது, சிகப்பு பச்சை மற்றும் நாடு அரிசிகளுக்கு பெரிய பற்றாக்குறை உருவாகும். இதனால் நெல் விலையும் உயரும் நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
எனவே நெல் விலை உயர்த்தப்படுமானால், இந்த மூன்று வகை அரிசிகளுக்கும் விவசாயிகளுக்கு நியாயமான விலை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக பண்டிகை காலங்களில் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி விலைகள் மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.